உயிர் கொடுத்த சிறுமி வெண்பா: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
கோவைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

Published : February 27, 2026 at 8:37 PM IST
கோவை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 8 வயது சிறுமி வெண்பாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் சுகன்யா தம்பதியினரின் மகள் வெண்பா, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி பிப்ரவரி 25-ஆம் தேதி அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மகளின் பிரிவால் வாடிய அந்தப் பெற்றோர்கள், இக்கட்டான சூழலிலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர்.
தங்கள் மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்ததையடுத்து, வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் ஏழு நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சிறுமியின் இந்தத் தியாகத்தைப் பாராட்டி, அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கோவைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். தன் மகளை இழந்து வாடும் நிலையிலும், பிறருக்கு வாழ்வு கொடுத்த அந்தப் பெற்றோரின் மனஉறுதிக்கு முதல்வர் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிஞ்சு வயதில் ஏழு பேருக்கு வாழ்வளித்துச் சென்ற சிறுமி வெண்பாவின் செயல், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சான்றாக மாறியுள்ளது.

