ETV Bharat / state

விவசாயி வீட்டிற்கு திடீர் விசிட்; மூதாட்டிக்கு கண்ணாடி பரிசளிப்பு - சேலத்தில் பட்டையை கிளப்பிய முதல்வர் விஜய்

மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி ஒருவரின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார்.

மூதாட்டியுடன் அளவளாவிய முதல்வர் விஜய்
மூதாட்டியுடன் அளவளாவிய முதல்வர் விஜய் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 4:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கும்பொருட்டு முதலமைச்சர் விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் சென்றார். அவருக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் தயாராக இருந்த வெள்ளை நிற வேன் மூலம் மேட்டூர் புறப்பட்டார்.

சீறிப்பாயும் காவிரி நீர்
சீறிப்பாயும் காவிரி நீர் (ETV Bharat Tamil Nadu)

அப்போது வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் காத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களை பார்த்த முதலமைச்சர் விஜய் கையசைத்தபடியே உற்சாகமாக சென்றார். சுமார் ஒரு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு மேட்டூர் அணை பகுதிக்கு விஜய் வந்தடைந்தார்.

தொடர்ந்து மேட்டூர் அணையின் மதகு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்விசையை இயக்கி டெல்டா பாசனத்துக்கு நீரை திறந்து வைத்தார். அணைப்பகுதியில் கடுமையான வெயில் காரணமாக வெப்பம் நிலவிய போதும், செருப்பு அணியாமலேயே நீரை திறந்து வைத்து காவிரி தாய்க்கு முதலமைச்சர் மரியாதை செய்தார்.

தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் மேட்டூர் அணையின் இடதுபுறமுள்ள மின்நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சர் நெல்மணிகளை கொடுத்தார். விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்தனர்.

45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து இன்று மாலை 12 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி ஒருவரின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சரை, அங்கிருந்த மூதாட்டி அவரின் கையை பிடித்து அழைத்து சென்றார். அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.

மேலும் மூதாட்டி ஒருவருக்கு கருப்பு நிற கண் கண்ணாடியையும் அணிவித்து, அங்குள்ள பெண்கள் அனைவருக்கும் புடவைகளை பரிசளித்தார். முதலமைச்சரின் இந்த திடீர் விசிட் அப்பகுதி மக்களை பெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.