ETV Bharat / state

திமுக தீய சக்தி; அதிமுக தீர்ந்து போன சக்தி - திருச்சி கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் விஜய்

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து வாங்கிய வாக்குகளை விட தவெக அதிகம் வாங்கியதால் நம்மை எம்ஜிஆர் உடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஒருவர் மட்டும்தான் என விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.

திருச்சி கூட்டத்தில் முதல்வர் விஜய்
திருச்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் (@TVK Youtube)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2026 at 5:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

திருச்சி: திமுக தீய சக்தி என்றால், அதிமுக தீர்ந்து போன சக்தி என முதலமைச்சர் விஜய் திருச்சி கூட்டத்தில் ஆவேசமாக தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த திருச்சி கிழக்குத் தொகுதி பொதுமக்களுக்கு இன்று நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளார். அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தவெக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் அங்கு வந்தார். அவருக்கு அங்கே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் தனது உரையை தொடங்கினார்.

திருச்சி கிழக்கு ஸ்பெஷல் தொகுதி

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் வணக்கம். தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி இதயம் போன்றோ, அதுபோல எனக்கு திருச்சி கிழக்கு தொகுதி இதயத்திற்கு நெருக்கமானது.

ஆறு நாட்களில் விமர்சனம்

ஆட்சியிக்கு வந்த ஆறு மாதம் அமைதி காப்போம் என்று கூறியவர்கள் எல்லாம், தவெக ஆட்சி அமைத்த ஆறு நாள்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். தவெக அரசை விமர்சிப்பவர்கள், விமர்சித்துக்கொண்டே இருங்கள். ஆனால் மக்கள் எங்களை மட்டுமே ஆதரித்து கொண்டே இருப்பார்கள். தேர்தலுக்கு முன்பு நான் கூறியதை போல இப்போதும் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக. தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டு, தற்போது நடைபெறும் குற்றங்களுக்கு என் மீது பழிபோடுகிறார்கள். திமுக தற்போது தீய சக்தி மட்டும் அல்ல, தூர சக்தியாக மாறிவிட்டது. அதிமுக சீர்ந்து போன சக்தியாக மாறிவிட்டது.

எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்

இந்த நேரத்தில் தவெக ஆட்சி அமைக்க உதவிய அனைத்து இயக்கங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து வாங்கிய வாக்குகளை விட நாம் அதிகம் வாங்கியுள்ளோம் என பலர் கூறுகிறார்கள். அதற்காக என்னை எம்ஜிஆர் உடன் ஒப்பிட வேண்டாம். எம்ஜிஆர் ஒருவர் மட்டும்தான். தமிழக மக்கள் நமக்கு பேராதரவு கொடுத்துள்ளார்கள். ஆனால் இன்னும் அதிகம் ஆதரித்திருந்தால், தனி மெஜாட்டியோடு வெற்றி பெற்றிருக்கும்.

தற்குறிகள் அமைத்த அரசு

தேர்தலுக்கு முன்பு தவெகவை ஆதரித்தவர்களை திமுகவினர் தற்குறிகள் என்று விமர்னம் செய்தார்கள். தற்போது வெற்றி பெற்று ஆட்சியில் அமைத்த நிலையிலும், தற்குறிகள் என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். நான் கோபப்பட்டு பேசக் கூடாது என்று நினைக்கிறேன். இதோடு அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து எங்கள் மீது அவதூறு பரப்பி வந்தால் இந்த விஜய் அமைதியாக இருக்க மாட்டான்.

குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

எங்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது என்பதால், நாங்கள் குதிரை பேரம் செய்வதாக திமுக குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களுக்கு எந்த குதிரை பேரமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. இந்த ஆட்சி மக்களுக்கானது. மக்கள் விரும்பியது.

தமிழ்நாட்டில் சாதி, மதம் பார்க்காமல் மக்கள் வாக்களித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நமக்கு வாக்களித்தவர்களை அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களித்துவிட்டதாக திமுகவினர் குறை கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு வாக்களித்தபோது அவர்கள் நல்லவர்களாக தெரிந்தார்கள், தவெகவுக்கு வாக்களித்தால் அவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்களாக மாறிவிடுவார்களா?

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு கொடுங்கள்

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளும் நமக்கு முக்கியமானது என்றாலும், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகள் என் கண்களை போன்றவை. அதிலும் திருச்சி கிழக்கு தொகுதி என் செல்லக்குழந்தை போன்றது. இந்த தொகுதியில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இந்த தொகுதி மக்கள் நிச்சயம் தவெகவை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். நல்லதே நடக்கும். மீண்டும் சந்திப்போம்" என்றார்.

சென்னை புறப்பட்டார்: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 5:30 மணியளவில், திருசசியில் இருந்து முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.