நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
அஜித் குமார் தாயாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 8.30 மணி அளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : May 30, 2026 at 10:45 PM IST
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், கார் ரேசருமான அஜித்குமாரின் தாயார் மோகினி (வயது 89) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், அஜித் குமார் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மோகினி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்த நடிகர் அஜித்குமார் தனது தயார் இறப்பு செய்தி கேட்டு அவசரமாக சென்னை திரும்பினார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் முதலமைச்சர் விஜய்யுடன் நடிகை த்ரிஷாவும் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
| இதையும் படிங்க: தாயார் மறைவு; துபாயில் இருந்து சென்னை திரும்பிய அஜித் குமார் |
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஜித் குமார் தாயாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 8.30 மணி அளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

