ETV Bharat / state

இரண்டு நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

மேகதாது அணை பிரச்சனை, நீட் விவகாரம், மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசிக்க உள்ளார்.

முதலமைச்சர் விஜய் - கோப்புப்படம்
முதலமைச்சர் விஜய் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 6:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இரண்டு நாள்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10 -ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அவர், இரண்டு நாள் பயணமாக நாளை (மே 27) டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தேசிய கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் பயணத்தின் ஒரு பகுதியாக நாளை மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, நாளை இரவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

முன்னதாக, நாளை காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குதிரை பேரம் நடைபெறவில்லை; எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது அவர்களின் விருப்பம் என்கிறார் செங்கோட்டையன்

தொடர்ந்து, டெல்லி பயணத்தின்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கும் முதலமைச்சர் விஜய் செல்ல உள்ளார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

நேரம் ஒதுக்கப்பட்டால் முதலமைச்சர் விஜய் அவர்களையும் சந்திப்பார் என்றும். நேரம் கிடைக்காத பட்சத்தில் தொடர்புடைய தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்திப்பார்கள் எனவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரம், நீட் விவகாரம் மற்றும் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் விஜய் மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.