இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முதலமைச்சர் விஜய் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு
திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட கூடாது என்ற உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 28, 2026 at 1:36 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் ஆணையமும், இந்த தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில், முதலமைச்சர் விஜய் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ஆம் தேதி தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய் மே 10-ஆம் தேதியே அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை.
எனவே, காலியான சட்டமன்ற தொகுதிக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், இதற்கான தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவர் இல்லை. இடைத்தேர்தல் நடைபெற உள்ள எந்த தொகுதியின் வாக்காளரும் இல்லை.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட கூடாது என்ற உள்நோக்கத்தின் அடிப்படையில் இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் பொதுநலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஐந்து தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, பொதுநல வழக்கை தாக்கல் செய்ய முடியாது.
இதையும் படிங்க: காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் - இடைத்தேர்தல் நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் என்ன?
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக எப்படி அறிவிக்க முடியும். காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை உடனே அறிவிக்க வேண்டும்.
மேலும், இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் பலமுனை போட்டி நடைபெற்றுள்ளது. இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடவில்லை. எனவே பொதுநலன் கருதி இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் நீக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

