ETV Bharat / state

'புதிய அத்தியாயம் தொடக்கம்' தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

கப்பல் கட்டுமானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான திறனை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 6:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டை நிலைத்த மற்றும் தொழிற்நுட்பரீதியாக மேம்பட்ட கப்பல் கட்டுமானத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக நிலை நிறுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று வெளியிடப்பட்டது.

கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முழுமையான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும்.

கப்பல் கட்டுமானத் தளம் (Shipyard), பசுமை கப்பல் மறுசுழற்சி (Green Ship Recycling) மற்றும் கப்பல் உதிரிபாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் (Marine Component Manufacturing) முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், இக்கொள்கை விரிவான ஊக்குவிப்பு கட்டமைப்பை வழங்குகிறது.

முதலீட்டில் பங்களிப்பு (equity participation), சொத்து குத்தகை (asset leasing), மூலதன மானியம் (Capital Subsidy) மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (Production-linked Incentives) ஆகியவற்றைக் கொண்ட அமைப்புமுறையிலான ஊக்கத் தொகுப்பு (Structured Package of Assistance) வழங்கப்படும்.

தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை குறித்த முகப்புப்படம்
தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை குறித்த முகப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

மேலும், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களுக்கு இணங்கச் செயல்படும் சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிலையங்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படும். கப்பல் உதிரி பாகங்கள் உற்பத்தித் துறைக்கு, வளர்ந்து வரும் துறைக்கான (Sunrise Sector) சிறப்பு அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன்கீழ் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும்.

SIPCOT மற்றும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, NSHIPTN என்ற சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) அமைத்தல், ஒற்றைச் சாளர இணையதளம் மூலம் அனுமதி (single-window project facilitation) மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் (Indian Maritime University - IMU) ஒருங்கிணந்து இத்துறைக்குத் தேவையான சிறப்பு படிப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITIs), பல்தொழிற்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்புடன் பல்நிலை திறன் மேம்பாட்டு அமைப்பு போன்ற நிறுவன ஆதரவுகள் மூலம் இத்துறை வலுப்படுத்தப்படும்.

இதன் மூலம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகி, கடற்கரைப் பகுதிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, நீல பொருளாதாரத்தில் உலகளவில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும் வகையில் இந்த தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியிடப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "முதல்வர் தலைமையில், இன்று தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியிடப்பட்டது. SIPCOT கீழ் செயல்படும் NSHIPTN மூலம், பெரிய வர்த்தகக் கப்பல்கள், பாதுகாப்புத் துறை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பசுமை கப்பல்கள் மற்றும் கடலோர கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கக்கூடிய உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டுமானக் குழுமங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளன.

உலகளாவிய கப்பல் கட்டுமானத் தளங்களையும் கடல்சார் உற்பத்தியாளர்களையும் ஈர்க்கும் வகையில், இக்கொள்கையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊக்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பங்குதார முதலீடு, சொத்து குத்தகை, மூலதன ஆதரவு மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்கள் மூலம் கப்பல் கட்டுமானம், கடல்சார் பொறியியல் மற்றும் தொடர்புடைய உற்பத்தித் துறைகளில் நீண்டகால முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். நிலைத்தன்மை இந்த முயற்சியின் மையமாக இருக்கும்.

பசுமை கப்பல் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பொறுப்புடன் கூடிய கப்பல் கட்டுமான நடைமுறைகள் மற்றும் Industry 4.0 திறன் மேம்பாடு ஆகியவை துறையின் வளர்ச்சியை வடிவமைக்கும். Indian Maritime University மற்றும் மாநில கப்பல் கட்டுமான திறன் மேம்பாட்டு கவுன்சில் போன்ற நிறுவனங்கள், இந்த உருவாகும் சூழலுக்கான பணியாளர்கள் மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும்.

1,076 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை, 2,00,000 DWT-க்கு மேற்பட்ட கப்பல்களை கையாளக்கூடிய ஆழக்கடல் அணுகல் வசதி மற்றும் இந்தியாவின் தொழில்துறை பொருளாதாரத்தை முன்னெடுத்து வரும் 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கொண்ட வலுவான உற்பத்தி அமைப்பு. இந்தக் கொள்கை, அந்த வலிமையை தெளிவான கடல்சார் உற்பத்தி மையமாக மாற்றுகிறது.

சோழர் காலத்திலிருந்து நவீன காலம் வரை, தமிழ்நாடு எப்போதும் ஒரு கடல்சார் மாநிலமாக இருந்து வருகிறது. நமது கடற்கரை நம்மை உலகத்துடன் இணைத்துள்ளது. இப்போது முதல்வர் தலைமையில், கப்பல் கட்டுமானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான தொழில்துறை திறனை உருவாக்கி வருகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

எம்ஆர்எப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதனிடையே, 5300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், MRF நிறுவனம், சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.