ETV Bharat / state

'கருணாநிதி, ஏவிஎம் சரவணன் ஆகியோர் எனது அசையா சொத்துக்கள்' - ரஜினி உருக்கம்

தமிழ் திரை உலகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏவிஎம் நிறுவனத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு நிகழ்ச்சி
ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு நிகழ்ச்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 4, 2026 at 4:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: எனக்கு அசையா சொத்து கே.பாலசந்தர், ஏவிஎம் சரவணன், கருணாநிதி ஆகியோர் தான் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.

மறைந்த புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜன.4) சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஏவிஎம் சரவணனின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், எம்பியும், நடிகருமான கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏவிஎம் சரவணன் மறைவுக்கு 2 நிமிடம் மவுன மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''தமிழ் திரை உலகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏவிஎம் நிறுவனத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. மெய்யப்பன் செட்டியாரை ''அப்புச்சி, அப்புச்சி'' என்றுதான் செல்லமாக, மரியாதையாக அழைப்பாளர்கள். அவரின் மறைவுக்கு பின்பு இந்த நிறுவனத்தை சரவணன் கட்டி காத்துள்ளார். சரவணன் அவரது பள்ளியில் பேச்சு போட்டியில் கலந்துகொள்வார். முதன் முதலில் பராசக்தி வசனத்தை பேசிதான் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

நான் மேயராக இருந்த நேரத்தில் மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு செல்வேன். அப்போது என்னுடன் வரும் ஏவிஎம் சரவணன் சென்னையின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னிடம் பேசுவார். நான் மேயராக பொறுப்பில் இருந்த நேரத்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமானம் மூலம் திருப்பதி செல்லும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு காரணம் ஏசிஎம் சரவணன்தான்.

என்னதான் சட்டம் போட்டாலும் திருட்டு விசிடி-ஐ கட்டுப்படுத்த முடியாது என விமானத்தில் செல்லும் நேரத்தில் சரவணன் என்னிடம் பேசி இருக்கிறார். காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். அதில் எனக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்'' என்றார்.

ரஜினி பேசுகையில், ''ஏவிஎம் சரவணன் பேச்சிலும், செயலிலும் தூய்மை கொண்டவராக இருந்தவர். 1975 ஆம் ஆண்டில் தான் அவரை முதல் முறையாக பார்த்தேன். முரட்டுக்காளை படத்தின் போது ஏவிஎம் சரவணனை வந்து சந்தித்தேன். அவரின் அலுவலகம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. நானும் பல அரசியல் கட்சியினர், முக்கியமானவர்களின் அலுவலகங்களுக்கு சென்றுள்ளேன். எதுவும் அப்படி இருந்தில்லை. அவர் அலுவலகத்திலேயே உட்கார்ந்து கொண்டு எல்லா படங்களையும் வெற்றி பெற வைப்பார். ஏவிஎம் சரவணன் சினிமாவில் மட்டும் அல்ல, தனிப்பட்ட முறையிலும் நிறைய உதவிகளை செய்துள்ளார்.

என்னுடைய இடம் ஒன்று காலியாக கிடந்தது. அதில் ஏதாவது கட்ட வேண்டும் என்று எண்ணினேன். அப்படி, அவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது தான் ராகவேந்திரா மண்டபம். வயது ஆக ஆக பிசியாக இருக்க வேண்டும். அதுதான் உடம்புக்கும் நல்லது மனதுக்கும் நல்லது என்று அடிக்கடி என்னிடம் சொல்வார். நான் குறைந்தது வருடத்துக்கு ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று கூறுவார். அவர் சொன்னதை நான் இப்போதும் செய்துகொண்டு இருக்கிறேன். அவர் அரசியல் சார்ந்தவர் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கும் அவர் மீது அவ்வளவு மரியாதை இருந்தது. சிவாஜி படம் அரசியல் கட்சியினருக்கு எதிரான படம், ஆனால் அந்த படத்தின் நிகழ்ச்சிக்கு கருணாநிதி கலந்துகொண்டார். அதற்கு மிக முக்கிய காரணம் ஏவிஎம் சரவணன் தான்.

தற்போது முதல்வர் தன் பணியை விட்டு விட்டு வந்துள்ளார். தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியமானது. அதை விட்டு விட்டு தற்போது முதல்வர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததால் அவருக்கு 100 வாக்குகள் அதிகமாக கிடைக்காது. இருப்பினும் சரவணனுக்காக அவர் கலந்துகொண்டுள்ளார். அசையா சொத்துக்குத்தான் மதிப்பு அதிகம். அப்படி சிலர் இருக்கிறார்கள். எனக்கு அசையா சொத்து கே.பாலசந்தர், ஏவிஎம் சரவணன், கருணாநிதி ஆகியோர் தான்.

நாம் யாரை மிகவும் விரும்புகிறோமோ அவர்களை காலம் சீக்கிரமாக எடுத்துக்கொள்கிறது. நமக்கு எவ்வளவு பணம், பெயர், புகழ், குடும்பம், சொத்து, பிள்ளைகள் இருந்தாலும், அது போன்ற மனிதர்கள் விட்டு செல்லும் போது நாம் அனாதையானது போன்ற ஒரு உணர்வு வருகிறது'' என உருக்கமாக பேசினார்.

கமல்ஹாசன் பேசுகையில், ''நான் அங்கு (ஏவிஎம்) செல்லும்போது சிறுவனாக இருந்தேன். அங்கு கிடந்த மாம்பழத்தை சாப்பிட்டு பின் சினிமாவை கற்றுக் கொண்டேன். எப்படி எல்லாம் நான் வர வேண்டுமோ? அதை எல்லாம் என் படத்திற்கு டைட்டிலாக வைத்திருப்பார்கள். நான் சகலகலா வல்லவன் என்றால் அவரும் (சரவணன்) சகலகலா வல்லவன்தான். ஏவிஎம் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை உண்டு. அந்த பெருமையை கொடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இங்கு வந்தவர்கள் எல்லாம் சம்பிரதாயத்திற்காக வந்தவர்கள் இல்லை. அன்புக்காகவும், மரியாதைக்காகவும் வந்தவர்கள். ஏவிஎம் இன்ஸ்டிடியூஷனில் நான் படித்தது தான் இன்று வரை எனக்கு கை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஏவிஎம் மேல்நிலைப்பள்ளி அப்பொழுது கட்டப்படவில்லை. ஒரு வேலை கட்டி இருந்தால் நான் படித்திருப்பேன். நான் தவறு செய்யும் பொழுது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் பொழுது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏவிஎம் சரவணன்'' என பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் பழைய மந்தையில் புதிய கல் - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்