முத்தமிழ்ப் பேரவையின் இசை விழா; நடிகர் நாசர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Published : December 15, 2025 at 10:58 PM IST
சென்னை: எதிர்காலத் தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிக மிக முக்கியம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ்ப் பேரவை விருது வழங்கும் விழாவை நான் தவறவிடவேமாட்டேன். தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். நாசர் கூட, குறிப்பிட்டுச் சொன்னார்; அடுத்தாண்டு முதல்வராக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வேண்டும் என்று சொன்னார். நான் அடக்கத்தோடு சொல்கிறேன்; முதல்வராக வருவேனோ இல்லையோ, முதல் நபராக நான் நிச்சயம் வருவேன்.
இந்த ஆண்டு திரைப்பட நாயகர் நாசருக்கு 'கலைஞர்' விருது வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கனல் தெறிக்கக்கூடிய கருணாநிதியுடைய வசனங்களை பேசி நடித்தவர் நம்முடைய நாசர். 1984-ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பல சினிமா கம்பெனிகளில், 'கலைஞரின்' பராசக்தி வசனத்தை பேசித்தான் நடிகனாகும் வாய்ப்பு கிடைத்தது என்றும் பல மேடைகளில் சொன்னவர் நாசர்.
அதேபோல, 'ராஜரத்னா' விருதை வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி பெற்றிருக்கிறார். 60 ஆண்டுகளாக, 10 ஆயிரம் மேடைகளில் பங்கெடுத்த கலைமாமணி இவர். இங்கு மட்டுமல்ல, பல உலக நாடுகளிலும் இவரின் இசை ஒலித்துகொண்டு இருக்கிறது.
அதேபோல, 'இயல்செல்வம்' விருது பெறும் திருவாரூர் புலவர் சண்முகவடிவேலன் இந்த அரங்கிற்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. யூடியுப் திறந்தாலே அவரை பார்க்காமல் இருக்க முடியாது; நான் கூட இரவில் தூங்கும்பொழுது, அவருடைய பட்டிமன்றத்தை கேட்டுவிட்டு, அவருடைய நகைச்சுவை, கருத்துக்களை கேட்டுவிட்டு தான் சில நேரங்களில் தூங்குவது உண்டு.
'இசைச் செல்வம்' விருதை காயத்திரி வேங்கடராகவன் பெற்றிருக்கிறார். தனது குரலால் அனைவர் மனதையும் ஈர்க்கும் இசைக் கலைஞராக இசையுலகத்தில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பவர் காயத்திரி வேங்கடராகவன் இந்த விருதை பெற்றிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது.
'நாட்டியச் செல்வம்' விருதை அனிதாகுஹா பெற்றிருக்கிறார். சென்னையில் இருக்கும் மிகப் பிரபலமான பரதநாட்டிய ஆசிரியர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர். இளம் பருவத்தில் இருந்தே ஆடற்கலையில் தேர்ந்த இவர், நடன நாட்டியங்களின் மூலமாக புகழ்பெற்றிருக்கிறார். ராதா, ராவணன், வள்ளி போன்ற வேடங்களின் மூலமாக பலரின் மனதிலும் இடம்பிடித்தவர்.
'நாதஸ்வரச் செல்வம்' விருதை திருமெய்ஞானம் சகோதரர்களான ஐயப்பன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் குடும்பமே ஒரு இசைக்குடும்பம். தந்தையார் டி.கே.ராமசாமி மிகப்பெரிய நாதஸ்வர மேதை. குருவை மிஞ்சிய சிஷ்யர்களாகவும் இருக்கிறார்கள். தங்களைப் போலவே மேலும் பல திறமைசாலிகளை உருவாக்கியும் வருகிறார்கள்.
'தவில் செல்வம்' விருதை நாங்கூர் என்.கே.செல்வகணபதி பெற்றிருக்கிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசை கற்று, அங்கேயே 22 ஆண்டுகளாக தவில் பேராசிரியராக இயங்கி வரும் சிறப்புக்குரியவர் செல்வகணபதி.
'மிருதங்கச் செல்வம்' விருதை தஞ்சாவூர் கே.முருகபூபதி பெற்றிருக்கிறார். பல தலைமுறைகளாக இசைத் தொண்டாற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். உலகப் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்! வட இந்திய இசை மேடைகளிலும் நுழைந்து கலக்கிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். பெறாத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விருதுகளை பெற்று குவித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, விருது பெற்றிருக்கக்கூடிய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
எதிர்காலத் தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிக மிக முக்கியம். கலைஞர்களாகிய நீங்கள், உங்கள் பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.'' என்று ஸ்டாலின் பேசினார்.

