ETV Bharat / state

AI-ஆல் ஒருபோதும் மனிதர்களை ரீ-பிளேஸ் செய்ய முடியாது - முதல்வர் ஸ்டாலின்

உலகத்தோடு போட்டி போடுங்கள்.. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைதான், இன்றைக்கு உங்கள் கைகளில் வழங்கியிருக்கிறோம் என முதல்வர் கூறினார்.

மாணவர்களுக்கு லேப்டாப் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
மாணவர்களுக்கு லேப்டாப் விழாவில் முதல்வர் ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 10:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஏ.ஐ.-ஆல் ஒருபோதும் மனிதர்களை ரீ-பிளேஸ் செய்ய முடியாது. மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கின்ற இரண்டாவது நெருப்புதான், AI. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்றைக்கு உங்கள் கைகளில் லேப்டாப் வழங்கியிருக்கிறோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், Dell, Acer, HP போன்ற உலகத் நிறுவனங்களின் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365 மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், '' தமிழர்களான நாம் எப்போதும் கடந்த கால பெருமைகளையும் பேசுவோம். எதிர்கால பெருமைகளுக்காக உழைப்போம். ஒருபோதும், போலி பெருமைகளை பேசி தேங்கிட மாட்டோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா. உங்களின் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் ஊக்குவிக்கப்பட்டால் தான், புது புது கண்டுபிடிப்புகள் நிகழும். தொழில்நுட்பம் வளரும்.

மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கின்ற இரண்டாவது நெருப்புதான், A.I. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்றைக்கு உங்கள் கைகளில் லேப்டாப் வழங்கியிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எண்ணம் எல்லாம் என்ன தெரியுமா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? எத்தனை டிகிரி வாங்குகிறீர்கள்? என்ன வேலைகளில், எவ்வளவு பெரிய உயர்பொறுப்புகளில் இருக்கிறீர்கள்? சொந்தமாக தொழில் நடத்துகிறீர்களா? உங்களால் எத்தனை பேருக்கு வேலை வழங்க முடிகிறது? என்பதெல்லாம் தான்.

இன்றைக்கு உங்கள் கைகளுக்கு வந்திருக்கின்ற லேப்டாப், பரிசு பொருள் கிடையாது; உலகத்தை நீங்கள் ஆளுவதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு. எங்களை பொறுத்தவரை, இது செலவுத் திட்டம் கிடையாது; எதிர்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு.

இனிமேல், டெக்னாலஜியை படிப்பது என்பது ஆப்ஷன் கிடையாது; உங்கள் ஃபீல்டில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு அவசியமாக இருக்கிறது. தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிக்கும் மேலாக எல்லோருடைய கைகளுக்கும் அது வந்துவிட்டது. அதை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் - ஏ.ஐ.-ஆல் ஒருபோதும் மனிதர்களை ரீ-பிளேஸ் செய்ய முடியாது. நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாக செய்வதற்கும், இன்னும் சிறப்பாக செய்வதற்கும் தான் ஏ.ஐ. துணை நிற்கும்.

இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கின்ற லேப்டாப்பை - சும்மா படம் பார்க்க, கேம்ஸ் விளையாட, பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை, உங்கள் கரியருக்கான லாஞ்ச்-பேட்-ஆக பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா? இதுதான் நாங்கள் உங்கள் முன்னால் வைக்கக்கூடிய கேள்வி. எல்லாவற்றுக்குமே நல்லது, கெட்டது என்று இரண்டு சைடு இருக்கிறது. அதில் நீங்கள் எந்த சைடை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் வெற்றி உங்கள் சைடு வரும்.

உலகத்தோடு போட்டி போடுங்கள்.. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான கருவியைதான், இன்றைக்கு உங்கள் கைகளில் வழங்கியிருக்கிறோம்.

வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான் – நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். படியுங்கள், படியுங்கள், படியுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நான் இருக்கிறேன்.'' என பேசினார்.

இதையும் படிங்க: கூவத்தில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள்... சென்னையில் பெரும் பரபரப்பு