ரூ.840.76 கோடி செலவில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஒரே நாளில் திறந்து வைத்த முதல்வர்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Published : March 2, 2026 at 11:08 PM IST
சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகளில் வீடற்ற, குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக 74,126 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பங்கேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்படி, டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியில் 77.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 470 புதிய அடுக்குமாடி குடியிருப்பு; சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் 57.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 300 புதிய அடுக்குமாடி குடியிருப்பு; அப்பாசாமி முதலி தெரு திட்டப்பகுதியில் 12.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 68 புதிய அடுக்குமாடி குடியிருப்பு; பெரியபாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் 5.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 32 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மேலும், கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிசைகளை அகற்றி அப்பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க, 46.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 283 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயம்புத்தூர் அவிநாசி சட்டமன்றத் தொகுதி, மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் இன்று ஒரே நாளில் திறந்து வைத்தார். அதே போல, பல்வேறு திட்டங்களும் அடிக்கல் நாட்டினார்.
மேலும், இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், '' தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 209 திட்டப் பகுதிகளில் 74,126 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

