ETV Bharat / state

மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தோழர் நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி ஆ.ராசா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தோழர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தோழர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@TNDIPR21)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 8:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்து வந்த மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு (101) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, தி.நகர் பாலன் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நாளை மதியம் 3 மணி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், அதன்பிறகு அவரது விருப்பப்படி மருத்துவ ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனையில் நல்லகண்ணுவின் உடல் ஒப்படைக்கப்படும் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

இந்த நிலையில், நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மறைந்த நல்லக்கண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி ஆ.ராசா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: நல்லகண்ணு மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு; தவெக தலைவர் விஜய் இரங்கல்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடியவர்கள், அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள், அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக விளங்கியவர் தோழர் நல்லகண்ணு. அவரது மறைவு பொது வாழ்வில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு செய்தி. அவரை இழந்து வாடும் நல்லகண்ணுவின் குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “தோழர் ஆர்.நல்லகண்ணு இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக என தனது வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என அர்பணித்தவர். பொதுவுடமை கருத்தியலும், திராவிட கருத்தியலும் கொண்டு, தொழிலாளர் நலன் மற்றும் எளிய வாழ்வின் சான்றாக திகழ்ந்த அந்த மாமனிதருக்கு 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசானது தகைசால் விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.

அதேபோல, 2007ஆம் ஆண்டு அப்போதைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சகாயோகி விருதினையும், அதே ஆண்டு தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருதினையும் வழங்கி அன்னாரை பெருமைப்படுத்தியது. விடுதலைப் போராட்ட வீரராக மாபெரும் சமூக செயற்பாட்டாளராக மற்றும் அரசியல் கட்சித் தலைவராக அவர் இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆற்றிய தொண்டினை போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.