"கல்வி தான் கடவுள் - அது தேவையான அனைத்தையும் கொடுக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
என்னை நினைத்து நானே பெருமை கொள்ளும் நாள் இன்று. மக்களை மையப்படுத்தி மக்களுக்கு தேவையானதை செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Published : February 23, 2026 at 5:15 PM IST
சென்னை: கல்வி தான் கடவுள், அது தேவையான அனைத்தையும் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 75 செலவில் கட்டப்பட்ட 2 அமுதம் நியாய விலை கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம், சாலையோர பூங்கா, நவீன பயணியர் நிழற்குடை மற்றும் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.31 கோடியே 45 செலவில் கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்களை தமிழக முதல்வரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பூரில் அமைந்துள்ள டான்பாஸ்கோ பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கண்ணகி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2007 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
என்னை நினைத்து நானே பெருமை கொள்ளும் நாள் இன்று. உங்களுக்காக உலகத் தரம் வாய்ந்த கல்லூரியை திறந்து வைத்துள்ளேன். நான் நினைத்ததை விட பல மடங்கு பிரமாண்டமாக கல்லூரியை அமைச்சர் சேகர்பாபு கட்டிக் கொடுத்துள்ளார். கொளத்தூர் மட்டும் இல்லாமல் சென்னையை சேர்ந்த பல மாணவர்கள் இந்த கல்லூரி மூலம் பயன் பெறுவார்கள்.
கல்வி தான் கடவுள். கல்வி உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும். எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம். ஆனால் திமுகவிற்கு இது மாநாடு மாதமாக இருந்து வந்துள்ளது.
மற்றவர்கள் தொகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி ஓய்வெடுத்து உற்சாகம் அடைவார்கள். ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே உற்சாகம் அடைந்து விடுவேன். உலகமே போற்றும் திராவிட மாடல் ஆட்சியின் மாதிரி தொகுதியாக கொளத்தூர் இருந்து வருகிறது. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து சுமார் 516 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கலைஞர் மகளிர் உரிமை திட்டமும், வேலைக்கு செல்லும் பெண்கள் யாருக்கும் காத்திருக்கக் கூடாது என்பதற்காக மகளிர் விடியல் திட்டமும், ஒரு பெண் கல்வி கற்றால் அவர்களின் தலைமுறையே நன்றாக இருக்கும் என்பதற்காக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டமும் போன்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
இது மட்டும் இல்லாமல் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்களிடம் எடுத்து செல்ல உலகம் உங்கள் கையில் திட்டம் மூலமாக லேப்டாப் வழங்கும் திட்டம் மற்றும் தொழிற்துறையில் பயன்பெறும் விதமாக நான் முதல்வன் திட்டம் மற்றும் பெண்களின் குடும்ப சுமையை குறைக்க காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்று அனைத்து மக்களுக்கமான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களுக்கு தேவையானதை செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

