ETV Bharat / state

'மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு' - பிரதமருக்கு ஸ்டாலின் முக்கிய கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாக பாதிக்கும் என்பதால் வினாப் படிவங்கள், வழிமுறைகளை முடிவு செய்வதற்கு முன்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ள ஒரு கடிதத்தில், ''தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவு மூலமாக விரிவான, நம்பகமான தரவுகள் பெற்று சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும்.

இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப் போவதால் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி இந்த கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவானது ஆதாரங்களின் அடிப்படையிலான சமூக நீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதி செய்கிறது.

இருப்பினும் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படா விட்டால், எதிர்பாராத சமூக பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுப்பூர்வமான விஷயமாக உள்ளதால் இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறை துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியும்.

இல்லாவிடில் இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும். இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும் குறிப்பிட்ட நுணுக்கங்களை கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க: ஜனநாயகன் படத்திற்கு குரல் கொடுக்கும் முதலமைச்சர் போராடும் அரசு ஊழியர்களை மறந்தது ஏன்? - சீமான்

எனவே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவும் மற்றும் இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனை பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். பிரதமர் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலை நிறுத்தவும் பயன்படுத்தப்படும்'' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.