ETV Bharat / state

'டெல்லி பார்முலாவை தமிழ்நாட்டில் செயல்படுத்த பாஜக முயற்சி' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் வந்துவிட்டது என்று கூட நினைக்காமல் தமிழ்நாட்டுக்கு எந்த வித திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட செங்கோல்
முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட செங்கோல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 9:22 PM IST

7 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: டெல்லி பார்முலாவை தமிழகத்தில் செயல்படுத்த பாஜக முயற்சி செய்வதாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தையே மாநாடு போல ஏற்பாடு செய்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருடைய இந்த ஆற்றல் தான் எதிரிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. செந்தில் பாலாஜிக்கு கொடுத்த குடைச்சல்களை வைத்தே, அவர் எதிராளிகளுக்கு எந்த அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பது தெரியும். இவர் அனுபவித்தது போல தொல்லைகளை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து கும்பிடு போடுபவர்களுக்கு மத்தியில், நெஞ்சுரத்துடன் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிறார்.

நான் இங்கு உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல, உங்களைப் பார்த்து உற்சாகமடையவே வந்துள்ளேன். உங்களது முகத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியும், எனர்ஜியும் உங்களிடம் இருந்து எனக்கு மாறி விடுகிறது. உங்களது நம்பிக்கையை பார்த்து எனது நம்பிக்கை அதிகரிக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தான் ரிசல்ட் அன்று பிளாஷ் நியூஸ் ஆக வர வேண்டும்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் நமக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதை சரி செய்து, மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் பொறுப்பு மேடையில் உள்ளவர்களுக்கும், எதிரில் இருக்கும் உங்களுக்கும் உள்ளது. இதை நீங்கள் செய்வீர்களா? உறுதியாக, சத்தியமாக, அண்ணா மீது ஆணையாக செய்வீர்களா?

கோவைக்கு பல்வேறு திட்டங்கள்

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த மண்டலத்தில் எப்படி நமக்குப் பெரிய வெற்றி கிடைத்ததோ அதேபோல் பெரிய வெற்றியை வரும் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு மேற்கு மண்டலத்தில் பல்வேறு திட்டங்களை நாம் செய்திருக்கிறோம். பல்வேறு இடர்களை கடந்து அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். கோவையில் ஐ.டி பார்க், செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறந்து வைத்துள்ளோம். விசைத்தறிக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி, சிறுதொழில்களுக்கு மின் கட்டணம் குறைப்பு, விசைத்தறியை நவீனப்படுத்த நிதியுதவி கொடுத்துள்ளோம்.

அதேபோல், பெரியார் ஈவெரா பெயரில் இங்கு பெரிய நூலகம் அமைய உள்ளது. உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வெள்ளலூரில் தொல்லியல் ஆய்வு நடக்க உள்ளது. தோழி விடுதி கட்டப்பட உள்ளது. சூலூரில் செமி கண்டக்டர் பூங்கா வர உள்ளது. கோவை மாவட்டத்துக்கு 75 மின்சார பேருந்துகள் வர உள்ளன. மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இது போன்ற ஏராளமான திட்டங்கள் வர உள்ளன. தொழில் முனைவோர்கள் அதிகம் உள்ள மேற்கு மண்டலம் வளர்ச்சியை தான் விரும்பும் என்பதை நாம் நிரூபிக்கணும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை அடைந்தாலே நம்மால் எளிதில் 2.60 கோடி வாக்குகளுக்கு மேல் வாங்கலாம். அதை வாங்கிக் காட்டுவது உங்கள் பொறுப்பு, அதற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொடுப்பது எனது பொறுப்பு.

முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு
முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு (ETV Bharat Tamil Nadu)

இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் 40 முதல் 50 வாக்குகளைப் பெற பொறுப்பேற்க வேண்டும். இதை அடைந்தாலே 200 தொகுதிகள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் 200க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவதுதான் நமது லட்சியம். அடுத்த 2 மாதம் உங்களுக்கும் எனக்கும் ஓய்வு என்பதே கிடையாது. இதற்காக ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். என்ன தான் சமூக ஊடகங்கள் வந்தாலும் வீட்டுப்படியேறி சென்று வாக்காளரைக் கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்துக்கு ஈடாகாது.

மக்களின் குறைகளைக் கேட்டு பூர்த்தி செய்து, அவர்களின் இன்ப, துன்பங்களில் உடன் நிற்பதால் தான் மக்கள் நம்முடன் நிற்கிறார்கள். திமுக 75 ஆண்டுகளாக வலிமையுடன் நிற்க இது தான் காரணம். மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மக்களைத் தேடி, நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

திராவிட மாடல் உங்களுக்கு கொடுத்திருக்கும் சாதனைப் பட்டியல் புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டு மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும், அது வாக்குகளாக மாற வேண்டும். இது தான் உங்கள் கடமை. தெருமுனை கூட்டம், திண்ணைப் பிரசாரம், சமூக வலைதள பிரசாரம் என எல்லாவற்றிலும நாம்தான் முத்திரை பதிக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து செய்யும் கட்சி தான் திமுக. ஆனால் வளர்ச்சியை பிடிக்காத கட்சியாக பாஜக உள்ளது. எனவே மக்கள் அதை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். அதனால் அதிமுகவை தனது கிளைக் கழகமாக மாற்றி முன்னேறி வந்துவிடலாம் என்று பாஜக பார்க்கிறது.

ஜெயலலிதா புகழ் பாடும் மோடி

பிரதமர் மோடி தற்போது திடீரென மறைந்த ஜெயலலிதாவின் புகழைப் பாடத் தொடங்கியுள்ளார். குஜராத்தின் மோடியா? இந்த லேடியா? என சவால் விட்ட ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா விட்ட சவால் மறந்துவிட்டதா? இல்லை இந்தியாவிலேயே ஊழல் அதிகமாக நடைபெறும் அரசு அதிமுக அரசு தான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது மறந்துவிட்டதா? என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் மறந்திருக்கலாம். இவை எதையும் தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.

மத்திய பாஜகவின் 12 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்று எதையும் செய்யவில்லை. சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் இல்லாததால் ஜெயலலிதாவின் புகழைப் பாடினாலாவது வாக்குகள் வருமா என்று மோடி பார்க்கிறார். தேர்தல் வந்துவிட்டது என்று கூட பார்க்காமல் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் தமிழ்நாட்டுக்கு அறிவிக்க மனம் இல்லாத உங்களின் நடிப்பை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.

மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்கள்
மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)

தென்னிந்தியாவின் மான்செஸ்ட்டராக உள்ள கோவைக்கு மெட்ரோ திட்டத்துக்கு ஏன் அனுமதி தரவில்லை? கோயில் நகரமான மதுரைக்கும், திருச்சிக்கும் அனுமதி வழங்க உங்களை எது தடுக்கிறது? உங்களது அமைச்சரவைக் கூட்டத்தில் அகமதாபாத் மெட்ரோவுக்கு அனுமதி கொடுத்த நீங்கள், தமிழ்நாட்டுக்கு மெட்ரோவுக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? தமிழ்நாடு உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்திருக்கும் துரோகங்களையும், ஓரவஞ்சனைகளையும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதற்கு உங்களது பதில் என்ன? ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி எங்கே? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முழுமையான நிதியை எப்போது கொடுப்பீர்கள்? பள்ளிக் குழந்தைகளுக்கு எஸ்எஸ்ஏ நிதி ரூ.3500 கோடியை கொடுக்காமல் இழுத்தடிக்க என்ன காரணம்? ஜல்ஜீவன் திட்டத்துக்கான மானியம் ரூ.3,548 கோடியை எப்போது கொடுப்பீர்கள்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.2,246 கோடியை எப்போது தருவீர்கள்? மத்திய அரசின் திட்டங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கூட ஏன் நிறுத்தி வைத்திருக்கின்றீர்கள்? ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படப்போகிறதே இது அநியாயம் இல்லையா? ரிசர்வ் வங்கியில் தமிழ்நாட்டின் கணக்கில் இருந்த ரூ.1,079 கோடியை பிடித்தம் செய்தது சரியா? தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு 16,290 கோடி இழப்பீட்டு நிதி வழங்க நிபந்தனை விதித்து கூடுதல் சுமையை ஏற்படுத்தியது சரியா? இதையெல்லாம் நிதி நெருக்கடி என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

தோல்வியை பரிசளிக்க வேண்டும்

தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் இப்படியான துரோகங்களை செய்யக் கூடிய பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாபெரும் துரோகியாக உருவெடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழர் விரோதிகளும், தமிழின துரோகிகளும் வைத்திருக்கும் இந்த கூட்டணியை மக்கள் முன்பு அம்பலப்படுத்தி அவர்களுக்கு நாம் தோல்வியைப் பரிசளிக்க வேண்டும். இதுதான் நமது முன்பு இருக்கும் முதல் கடமை. பொதுவாக தேர்தல் கூட்டணியின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பார்கள். ஆனால் திமுக கூட்டணி அதை உடைத்திருக்கிறது. பாசிச பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கதுடன் 2019 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட நமது கூட்டணி, தொடர்ந்து 2021 சட்டப் பேரவைத் தேர்தல், நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், தற்போது நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் வரை கொள்கை உறுதியுடன் தொடருகிறது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் ஒரு கூட்டணி தொடருவது இதுதான் முதல்முறை. வளர்ச்சியிலும் சாதனைத் திட்டங்களிலும் மட்டுமல்ல கூட்டணியிலும் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். வெல்வோம் ஒன்றாக என்று எப்போதும் சொல்வது கொள்கையிலும் ஒன்றாக வெல்வோம் என்பதால் தான். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்காக கூட்டணி அமைத்திருப்பதாகக் கூறியுள்ளார். சர்க்கஸ் முடிந்த பிறகு கூடாரத்தை கழற்றிவிடுவதைப் போல, தேர்தலுக்குப் பிறகு ஆளுக்கு ஒருபுறமாகப் பிரிந்து தங்களது நாடகத்தை தொடருவார்கள்.

தமிழ்நாட்டில் தில்லி பார்முலா

இப்படிப்பட்ட என்டிஏ என்ற சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் பாஜக. அவர்கள் சொன்னபடி தமிழ்நாட்டில் வித்தை காட்டுபவர்தான் எடப்பாடி பழனிசாமி. தான் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்துதான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. தங்களது கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என்பதை அவரே மக்களிடம் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். மனதுக்குள் பேசுவதாக நினைத்து அவர் சத்தமாக பேசிவிட்டார். என்டிஏ கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. வழக்குகளில் இருந்து தன்னையும், உறவினர்களையும் காப்பாற்றுவதற்காக சுயநலத்துடன் அவர் அமைத்திருக்கும் கூட்டணி.

எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போது டெல்லிக்கு காரில் சென்று சரணாகதி அடைவது அவருக்கு பழக்கமானது. நாம் அப்படி இல்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம். இப்போது கூட டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்தார்கள். நேர்மையாக நேர்வழியில் தேர்தலை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டார்கள். இன்று அவர் மீதான வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவும் சிறையில் கழித்துள்ள நாட்களை பாஜகவினரால் திருப்பிக் கொடுக்க முடியுமா? மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? இதே பார்முலாவை தான் தமிழ்நாட்டில் செய்ய நினைக்கிறார்கள். தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டப் பார்க்கின்றனர். உங்களுடைய அரட்டல் மிரட்டல்களுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை. தைரியமாக எதிர்கொள்வோம். அதனால்தான் மக்கள் மட்டுமல்ல பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நமது கூட்டணியில் இணைகின்றனர்.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றதைத்தான் பார்த்திருக்கிறோம். அந்த வழக்கத்துக்கு மாறாக நமது கூட்டணியின் பலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாரெல்லாம் பாஜகவின் தமிழர் விரோத அரசியலை எதிர்க்கிறார்களோ, அவர்களும் நம்முடன் இணைந்து வெல்ல வேண்டும் என்று திமுக நினைக்கிறது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். திராவிடம், காந்தியம், மார்க்சியம், அம்பேத்கரியம், சிறுபான்மையினர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்று எல்லா கொள்கைகளையும் கொண்ட, ஜனநாயக சக்தியாக நாட்டுக்கே எடுத்துக்காட்டாக நமது கூட்டணி இருக்கிறது. அதனால்தான் நம்மை நாடி எல்லா கட்சிகளும் வருகின்றன.

ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது எல்லா தரப்பு குரல்களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்படித்தான் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உள்ளது. நாம் போராடுவது நம்முடைய கட்சிக்கும், கூட்டணியின் வெற்றிக்கும் இல்லை, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பாஜக டப்பா என்ஜின் முன்பு தமிழ்நாட்டின் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான் இந்தத் தேர்தல் வெற்றி பெற வேண்டியது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பரப்புரை செய்கிறேன். இதில் வெல்லப்போவது தமிழ்நாடு அணி தான்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் வேண்டாம் என எண்ணுவோருக்கு 'ஆஷா' படம் ஒரு பாடம்: அன்புமணி நெகிழ்ச்சி