ETV Bharat / state

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

எல்.கணேசன் மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எல்.கணேசன் (கோப்புப்படம்)
எல்.கணேசன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 4, 2026 at 5:50 PM IST

|

Updated : January 4, 2026 at 6:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுகவினரால் 'மொழிப்போர் தளபதி' என்று அழைக்கப்பட்டவரும், கட்சியின் மிக மூத்த நிர்வாகியுமான எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகரில் வசித்து வந்தவர் எல்.கணேசன் (92). தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரான இவர் 3 முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார். 2004-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார். 1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். திமுகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எல்.கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ எனவும் அழைக்கப்பட்டவர். திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் மதிமுகவில் இணைந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் திமுகவுக்கு திரும்பினார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த எல். கணேசன் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சி மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ''மொழிப்போர்க் களத்தில், இந்தி மொழியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட மாணவர் படையின் தளகர்த்தர்களில் ஒருவரும் - கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான எல்.கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி (ETV Bharat Tamil Nadu)

சட்டமன்றம் - சட்டமேலவை - நாடாளுமன்றம் என முழங்கிய அவரை இனி நாம் காண முடியாது என்பதை எண்ணும்போதே உள்ளம் வேதனையால் துடிக்கிறது. தலைவர் கருணாநிதியின் பாசத்தைப் பெற்ற 'எல்.ஜி.', 1989-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அவரது பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். நான் தஞ்சை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் தவறாது அவரது இல்லத்திற்குச் செல்வேன்; அவரும் புன்சிரிப்புடன் வரவேற்று, திமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி பொங்கப் பெருமையோடு சொல்வார்.

திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் கழக உடன்பிறப்புகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எல்.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சை விமானப்படை தளத்திற்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் பாலாஜி நகரில் உள்ள எல்.கணேசன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் எம்பி டிஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் முறையாக ஸ்கோர் போர்டு அறிமுகம் - அமைச்சர் மூர்த்தி
Last Updated : January 4, 2026 at 6:24 PM IST