ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் சோளிங்கரில் சுவாமி தரிசனம்
ராணிப்பேட்டைக்கு வருகை தந்த ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Published : May 29, 2026 at 8:17 PM IST
ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது உலகப் பிரசித்திப் பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில். இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர்.
அந்த வகையில், ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான நாரா லோகேஷ் இன்று (மே 29) அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற ஆந்திர அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யோக நரசிம்ம சுவாமியையும், அருள்மிகு அமிர்தவள்ளித்தாயாரையும் மனமுருகத் தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் கலந்துரையாடியதுடன் அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
திருக்கோயில் வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். அமைச்சருக்கு திருக்கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் ஆந்திராவுக்கு சென்றடைந்தார். இந்த நிகழ்வின் போது சித்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மோகன், சுற்றுலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் முரளி மோகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
| இதையும் படிங்க: அமைச்சருக்காக கடவுள் காத்திருக்க வேண்டாமே; நிர்மல் குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம் |
ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின் வருகையையொட்டி சோளிங்கர் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

