ETV Bharat / state

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை வாய்ந்தது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி

செல்போன் ஆஃப் மூலம் வாக்களிப்பதற்கோ அல்லது இணையதளம் மூலம் வாக்களிப்பதற்கோ அனுமதியளித்தால், அதனை பிறர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கல்வி மன்றங்களின் கருத்தரங்கில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
தேர்தல் கல்வி மன்றங்களின் கருத்தரங்கில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் (Election Commission)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 10:45 AM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் கல்வி மன்றங்கள் மற்றும் ECI Net செயலி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வி மன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பாதுகாப்பில்லை

அப்போது பேசிய அவர், “இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், வேட்புமனு பரிசீலனையின்போது சிலர் வேட்புமனுக்களை திரும்ப பெறுகின்றனர். இதனால் அந்த தொகுதியில் நிற்கும் ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டும் நிலைமை உருவாகிறது. அப்பொழுது அவருக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில், நோட்டா செயல்படுத்தப்பட்டது.

செல்போன் ஆஃப் மூலம் வாக்களிப்பதற்கோ அல்லது இணையதளம் மூலம் வாக்களிப்பதற்கோ அனுமதியளித்தால், அதனை பிறர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஏஐ தொழில்நுட்பம், இணையதள வசதி மற்றும் செல்போன் வாக்குப்பதிவு முறைகளைச் செயல்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு

தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குகளை பதிவு செய்யும் வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் வேறு எந்த தொடர்பும் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, வெளிபடைத்தன்மையுடன் வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும்.

மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவது குறித்து தொலைத்தொடர்பு இல்லாத இடங்களுக்கும், ஈசிஐ நெட் மூலம் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்துகிறோம். அவ்வாறு 99 சதவீதம் இடங்களை தொடர்பு கொள்ள முடிகிறது. இன்னும் ஒரு சதவீதம் இடங்களிலும், தொலைத்தொடர்பு இல்லாத பகுதிகளிலும் இருப்பவர்கள் தகவல்களை பெற்று பின்னர் அனுப்புகின்றனர்.

அதே போன்று, பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அம்முறை செயல்படுத்த பரிசீலிக்கலாம். சமூக வலைதளங்களை தேர்தல் ஆணையம் எந்த வகையில் பயன்படுத்தவேண்டும் என ஆலோசிக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை

காலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது எப்படி மாறாத இயற்கை நிகழ்வோ, அதுபோல தேர்தல் ஆணையமும் வெளிப்படையான செயல்பாடுகளை இயற்கையாகவே கொண்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 2026 ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தில் 41 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலின் போது வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் சொத்து உள்ளிட்டவற்றின் ஆவணங்கள் சட்டப்பூர்வமானவை. அவற்றில் தவறிருந்தால் சட்டரீதியாகவே நடவடிக்கை மேற்கொள்ளமுடியும். தேர்தல் ஆணையமே நேரடியாக சரிபார்த்து நடவடிக்கை மேற்கொள்ளமுடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சுயசான்றின் மூலமே மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தவறான தகவல்கள் அளித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டால் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாத என அறிவிக்கப்பட்டு, அவருக்கு அடுத்த நிலை உள்ளவரை வெற்றி பெற்றவர் என அறிவிப்போம்.

இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் கோடிகளில் சிக்கிய பணம் - 38 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

பெரு நாட்டில் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு நம்நாட்டு மதிப்பின்படி ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அங்கு 65 சதவிகிதமே வாக்குப்பதிவு உள்ளது. அதே நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 86 சதவிகிதம் முதல் 91 சதவிகிதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் 93.6 சதவிகிதம் வரை வாக்குப்பதிவு உள்ளது. ஆகவே, வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்காது. ஜனநாயக நாட்டில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்” எனக் கூறினார்.

சிறப்பாக செயல்படும் தேர்தல் ஆணையம்

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் ஒரே ஒரு வாக்காளருக்காகவும் ஒரு வாக்குச்சாவடி அமைத்து. அவர் உள்ள மலைப்பகுதிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று அவர் நல்ல நேரம் பார்த்து வாக்களிப்பது வரை காத்திருந்து வாக்களித்த பின்னர், அந்த இயந்திரத்தையும் பாதுகாப்பாக எடுத்து வந்ததனர். எனவே, தேர்தலில் வாக்காளர்கள் வாக்கு அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணைத் தேர்தல் ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கூடுதல் தலைமைச் செயலர் பி. சந்திரமோகன், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.