ETV Bharat / state

அடேங்கப்பா... இவ்வளவு திறமையா? எம்எல்ஏவை அசர வைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அவ்வையாரின் ஆத்திச்சூடி, இடைவிடாது 100 திருக்குறள்கள், நாட்டுப்புற பாடல் மற்றும் மிருகங்களை போல் மிமிக்கிரி செய்து காட்டி எம்எல்ஏவை வியப்படைய வைத்தனர்.

மாணவியின் திறமையை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ பனையூர் பாபு
மாணவியின் திறமையை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ பனையூர் பாபு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 8:25 PM IST

1 Min Read
Choose ETV Bharat

செங்கல்பட்டு: அடேங்கப்பா இவ்வளவு திறமையா? என செய்யூர் சட்டமன்ற உறுப்பினரை அரசுப் பள்ளி மாணவர்கள் அசர வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த முகையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிப்பதற்கு அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.68.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தின் திறப்பு விழா, முகையூர் பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமையில் இன்று (நவ. 14) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விசிக எம்எல்ஏ பனையூர் பாபு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டது.

அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: போலீஸை பார்த்ததும் பறந்த கார்: விடாமல் துரத்திச் சென்றால் 200 கிலோ குட்கா!

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் முன்பு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அவ்வையாரின் ஆத்திச்சூடி, இடைவிடாத 100 திருக்குறள்கள், நாட்டுப்புற பாடல் மற்றும் மிருகங்களை போல் மிமிக்கிரி செய்து காட்டியும் அசர வைத்தனர். அதனைக்கண்டு வியந்துபோன சட்டமன்ற உறுப்பினர் மாணவ, மாணவிகளை ஊக்கிவிக்கும் வகையில், மேடையிலேயே அவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.

மேலும், அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதையடுத்து மாநில அளவில் கோயம்புத்தூரில் நடக்கவுள்ள போட்டியில், இப்பள்ளி மாணவிகள் கலந்து கொள்வதற்கான அனைத்து செலவினங்களையும், சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.