ETV Bharat / state

செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வெற்றி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026: செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், அதிமுக தரப்பில் ராஜசேகர், நாதக-வின் சுவாதிலட்சுமி சேகர், தவெக-வின் மோகன் ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிமுக வேட்பாளர் ராஜசேகர்
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 1:55 AM IST

|

Updated : May 4, 2026 at 4:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

செய்யூர் (செங்கல்பட்டு): தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், செய்யூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரும்பாக்கம் ராஜசேகர் 5,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019-ல் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டம் 'குட்டி சென்னை' என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் சோழிங்கநல்லூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதிலுள்ள செய்யூர் ஒரு தனி தொகுதியாகும்.

எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு 1,00,917 ஆண் வாக்காளர்களும், 1,03,061 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேரும் என மொத்தமாக 2,03,998 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 85.40% வாக்குகள் பதிவான நிலையில், செய்யூர் (தனி) தொகுதியில் மட்டும் 90.84% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 2026 தேர்தலில் செய்யூர் தனி தொகுதி தற்போது திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியை சேர்ந்த சிந்தனை செல்வன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜசேகர், தவெக சார்பில் மோகன் ராஜா மற்றும் நாதக சார்பில் சுவாதி லட்சுமி சேகர் மற்றும் சுயேட்சைகள் உட்பட 13 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்ற நிலையில், பதிவான ஓட்டுகளும் தீவிரமாக எண்ணப்பட்டது. 22 சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 5,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 63,809 வாக்குகளும், தவெக வேட்பாளர் மோகன் ராஜா 58,141 வாக்குகளும், விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் 57,909 வாக்குகளும், நாதக வேட்பாளர் சுவாதி லட்சுமி 4,853 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் - 2026 லைவ் அப்டேட்ஸ்

2021 தேர்தலில் விசிக வேட்பாளர் பாபு 82,750 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத்தை (78,708) 4,042 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதேசமயம் தேமுதிகவை சேர்ந்த சிவா 3,054 வாக்குகளும், மநீம அன்பு தமிழ் சேகரன் 1,968 வாக்குகளும் எடுத்த நிலையில், நோட்டாவிற்கு மட்டும் 1,141 வாக்குகள் போடப்பட்டிருந்தது. மேலும், 2016 தேர்தலில் திமுகவை சேர்ந்த ஆர்.டி.அரசும், 2011-ல் அதிமுகவை சேர்ந்த ராஜி என்பவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

செய்யூர் தொகுதியைப் பொறுத்தவரை, சென்னைக்கு மிக அருகிலிருந்தும் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் சென்னை போன்ற பிற நகரங்களுக்கு இடம் பெயர வேண்டிய சூழல் நிலவுகிறது. அரசின் உதவிகள், மானியங்கள் முறையாக வந்து சேருவதில்லை எனக் கூறப்படுகிறது. செய்யூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறி கோடையில் ஏரி வறண்டு போகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.

செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதி - ஒரு பார்வை
தேர்தல்வெற்றி பெற்றவர்கட்சி
2026ராஜசேகர் அதிமுக
2021பாபுவிசிக
2016ஆர்.டி.அரசுதிமுக
2011வி.எஸ்.ராஜிஅதிமுக
Last Updated : May 4, 2026 at 4:22 PM IST