சென்னைக்கு ‘வாட்டர் மெட்ரோ’ - அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்த ‘கும்டா’
சென்னை சென்ட்ரல் முதல் மாமல்லபுரம் வரையிலான வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த அறிக்கையை தயார் செய்து அரசின் பார்வைக்கு ‘கும்டா’ கொண்டு சென்றுள்ளது.


Published : November 14, 2025 at 7:15 AM IST
By எஸ். ரவிச்சந்திரன்
சென்னை: சென்னையின் வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்த தனது ஆய்வறிக்கையை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA-கும்டா) அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், 2023 முதல் 2048-ஆம் ஆண்டு வரையிலான, 25 வருடகால தொலைநோக்கு போக்குவரத்து திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், பொது இடங்களில் சாலை வசதி, சாலை அமைப்பு, பார்க்கிங் வசதிகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ‘வாட்டர் மெட்ரோ’ போக்குவரத்து புதிதாக இடம் பெற்றுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வாட்டர் மெட்ரோ என்ற பெயர் தான் புதிதாக இருக்கலாம். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இப்போது கழிவுநீர் தேங்கி நிற்கும் கூவம் ஆறுகளில் படகு போக்குவரத்து இருந்தது. அது பக்கிங்காம் கால்வாய் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்தது.
மறுமலர்ச்சி பெறும் சென்னை
தற்போது, அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், சென்னை சென்ட்ரல் முதல் கோவளம் வரையில் 35 கிலோ மீட்டர் தொலைவிற்கும், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையில் 20 கி.மீ என மொத்தம் 55 கி.மீ தூரத்திற்கு நீர் வழி போக்குவரத்திற்கு கும்டா பரிந்துரை செய்துள்ளது. வாட்டர் மெட்ரோ சாதாரண ‘ஜெட்டி படகு’ போல் இல்லாமல், மின்சாரத்தால் இயக்கப்படும் படகு போக்குவரத்தாக இருக்கும்.
இதுதொடர்பாக தெரிந்துகொள்ளவும், வாட்டர் மெட்ரோ குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்வதற்காகவும் கும்டாவின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமாரை நேரடியாக சென்று சந்தித்தோம். அவர் கூறிய தகவல்கள் சாத்தியமற்ற மனநிலையையும் சாத்தியமாகும் என்ற நிலைக்கு மாற்றிவிடும் வகையில் இருந்தது.
சென்னைக்கு ஏன் இது தேவை, புறநகர் வளர்ச்சியுடன் இந்த திட்டங்கள் எப்படி இணைக்கப்படுகின்றன, வாகன நெரிசலை குறைப்பதில் இதன் முக்கிய பங்கு என்ன, இதில் சுற்றுலாவை மேம்படுத்த முன்னிலைபடுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் என்ன? என ஒரு நீண்ட கேள்விப் பட்டியலை சுருக்கமாக விளக்கி, மறுமலர்ச்சி சென்னைக்கு ஜெயக்குமார் தொடக்கப் புள்ளி வைத்துள்ளார்.
முக்கியமாக, தலைநகருக்கு அரணாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. சென்னைக்கு பெரும் ஆபத்தாக கருதப்படும் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் சேர்வது, மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளைக் களையும் வகையில் ‘கும்டா’வின் வாட்டர் மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூவத்தில் குளிக்கலாம்
இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை துறையில் அதிகாரியாக இருந்த ஜெயக்குமார், தற்போது கும்டாவின் உறுப்பினர் செயலாளராக உள்ளார். அடுத்த 25 ஆண்டிற்கான பெருநகர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆவணத்தை அவர் தயார் செய்துள்ளதாக நம்முடன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 55 கி.மீ வாட்டர் மெட்ரோ திட்டத்தின் வாயிலாக போக்குவரத்து, சுற்றுலா மட்டும் இல்லாமல், 55 கிமீ நீளத்திற்கு கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்றவையும் அமைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், வாட்டர் மெட்ரோ போக்குவரத்திற்காக சுத்தம் செய்யப்படும் இந்த 55 கிமீ வெள்ளப்பிடிப்பு பகுதி, பெருவெள்ளத் தடுப்பிற்கும் பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமில்லாமல், கடலில் இருந்து உப்புநீர் நிலத்தடி வழியாக நன்னீரில் கலப்பதையும் தடுக்கும் என்கிறது கும்டாவின் ஆய்வுகள்.
இவைகளைத் தவிர்த்து நடைபாதை, மிதிவண்டி பாதை, பூங்காக்கள் போன்றவற்றை கரைகளில் மேம்படுத்தினால், அருகில் உள்ள மக்கள் அதை பயன்படுத்துவதுடன், சுற்றுலாவும் மேம்படும் என்பது ஜெயக்குமார் போட்டுள்ள மாஸ்டர் பிளான்.
பொதுப் போக்குவரத்திற்காக நாங்கள் வழங்கி இருக்கும் திட்டத்திற்கு, சுமார் ரூ. 6,500 கோடி செலவாகும் என்று கூறும் ஜெயக்குமார், இதன் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும் என்றும், அதன் பின்னர் அரசு செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கும் என்றும் தெவித்தார்.
பக்கிங்காம் கால்வாய் நிலை என்ன?
ஜெயக்குமார் அளித்த தகவல்களின் படி, பக்கிங்காம் கால்வாயில் 2 மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதனை எடுத்தால் மொத்தம் 3 மீட்டர் ஆழம் கிடைக்கும். தற்போது, அந்த நீரில் மீன்கள் கூட வாழ முடியாத நிலையில் உள்ளது. அந்த அளவிற்கு கழிவு நீர் கலந்துள்ளது.
கால்வாய் தூர் வாரியப் பின்னர் கரைகளை பலப்படுத்தப்பட்டு, கழிவு நீர் கலப்பதை தடுத்து அதனை சுத்திகரிப்பதற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். அதில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டும் வெளியேறும் வகையில் கட்டுமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
அப்படி செய்யும்போது உயிரினங்கள் வாழ முடிவதுடன், போக்குவரத்திற்கும் கால்வாய் பயன்படும். மேலும், ‘லாக்’ முறையைப் பயன்படுத்தி தண்ணீர் வெளியே செல்லாமல் தடுக்க முடியும். உலகளவில் இந்த ‘லாக்’ முறை பயன்படுத்தப்படுகிறது. இதனை அனைத்து வடிவத்திலும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் மட்டுமே திட்டம் வேகமாக முழுமை பெறும் என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவற்றிற்கான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு 8 மாதங்கள் ஆகும் என்று கூறும் அவர், அதன் பின்னர் அரசிற்கு தெரிவித்து திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறினார்.
புதிய புறநகர் ரயில்வே திட்டங்கள்
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ராே ரயில் சேவை 54 கிலோ மீட்டர் பயன்பாட்டில் உள்ளது. இது 118 கி.மீ தூரத்திற்கு விரிவாக்க செய்யப்பட உள்ளது. 2048-இல் 400 கிலாே மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மாநகர பேருந்துகள் 3,400 இருக்கின்றன. இதனை 2048-இல் 8,500 பேருந்துகளாக அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புநநகர் ரயில்வே போக்குவரத்தை 200 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்க வேண்டும் என கும்டா கூறியுள்ளது. குறிப்பாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையில் 4-ஆவது வழித்தடத்துக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் 2-ஆவது வழி தடத்துக்கும்ம் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 ரயில் திட்டங்களும் புறநகர் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் என்கிறார் ஜெயக்குமார்.
மேலும், காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையில் புதிய வழித்தடம் அமைக்கவும் கும்டா பரிந்துரை செய்துள்ளது. இதில், திருவள்ளுர் மம்பேடு வழியாக காஞ்சிபுரத்திற்கு ஒரு வழித்தடமும், சென்னை எண்ணூர், சிங்கப்பெருமாள்கோவில், மகாபலிப்புரம் வரையில் ஒரு ரயில் வழித்தடமும் அடங்கும். இந்த திட்டங்கள் 25 ஆண்டுகளில் நிதியை பொறுத்து பல்வேறு கட்டங்களாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சென்னை மெட்ரோ விரிவாக்கப் பணிகள்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தாெடர்ந்து அதன் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்ய கும்டா பரிந்துரைத்துள்ளது.
தொடர்ந்து, தாம்பரம் வேளச்சேரி வழியாக கிண்டி, கிண்டியில் இருந்து அடையாறு பாேன்ற வழித்தடங்களை அமைக்கவும் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகத்திற்கும் இந்தத் திட்டத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளோம்.
சென்னை பொதுப் போக்குவரத்தை 1950 முதல் ஒப்பிட்டால் வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சாலையின் அளவை அதிகரிக்க முடியவில்லை. எனவே பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தால் தான், சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.
பொது போக்குவரத்து தான் தீர்வு
மக்களும் பொதுப் போக்குவரத்தில் செல்வதற்கு தயக்கம் காட்டாத வகையில் குளிர்சாதன பேருந்துகளை இயக்க வேண்டும் என கூலான பரிந்துரையை அரசுக்கு ஜெயக்குமார் வழங்கியுள்ளார். பொது மக்கள் தங்களின் வாகனங்களை வீடுகளிலே விட்டு விட்டு, பொதுப் பாேக்குவரத்தை பயன்படுத்த இவ்வகை திட்டங்கள் தூண்டுதலாக இருக்கும்.
மாநகர போக்குவரத்தில் தற்போதுள்ள 3.500 பேருந்துகள் 6,500 ஆக அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், கூடுலாக புறநகர் ரயில்களையும் இயக்கும்போது, நகர் மற்றும் புறநகர் இணைப்பு மேம்படும். இதனால், நெரிசல் மிகுந்த சமயங்களில் மக்கள் தயக்கமின்றி பொது போக்குவரத்தை பயன்படுத்தும் சூழல் ஏற்படும்.
அதேபோல், மண்டல அளவில் சென்னை-விழுப்புரம்-பாண்டிச்சேரி, சென்னை-தாம்பரம்-காஞ்சிபுரம் ஆகிய வழித்தடங்களுக்கான ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்ட அறிக்கையையும் சென்னை மெட்ரோ தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை-கும்மிடிப்பூண்டி-நெல்லூர்-ஸ்ரீ சிட்டி வழித்தடத்திற்கான 439 கி.மீ தொலைவு திட்டத்திற்கான பரிந்துரையையும் கும்டா வழங்கியுள்ளதாகவும், இதற்கான திட்ட அறிக்கை இன்னும் தயார் செய்யப்படவில்லை என்றும் ஜெயக்குமார் நம்மிடம் தெரிவித்தார்.

