சென்னை வரும் பிரதமர் மோடி: நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்; உங்க ஏரியாவும் இருக்கா?
பிரதமர் மோடி பயணிக்கும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.

Published : October 10, 2026 at 10:00 PM IST
|Updated : October 11, 2026 at 6:46 AM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.11) சென்னை வருவதை முன்னிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்நிலையில், பிரதமர் சென்னை வருவதை முன்னிட்டு நகரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முழுவதும் வாகனத் தணிக்கைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பயணிக்கும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நகரின் முக்கிய சாலைகளில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றங்கள்:
தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலை நோக்கி திருப்பி விடப்படும். பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள், சர்வதேச விமான நிலையச் சந்திப்பில் ஹோட்டல் ஏர்வே அருகே தாம்பரம் நோக்கி திருப்பி விடப்படும். கோயம்பேட்டில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், அசோக் நகர் 2-வது அவென்யூவில் கோயம்பேடு அல்லது கே.கே.நகர் நோக்கி திருப்பி விடப்படும்.
| இதையும் படிங்க: தேர்தலில் தோற்றும் ஆணவம் குறையவில்லையே; வருத்தமாக உள்ளது: திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர் |
அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள், சிபெட் (CIPET) சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கி திருப்பி விடப்படும். கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கி திருப்பி விடப்படும். இதே சாலையில் வரும் வாகனங்கள், ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
ஓஎம்ஆர் மற்றும் சர்தார் படேல் சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் சி.பி.டி. (CPT) நோக்கி திருப்பி விடப்படும். காந்தி மண்டபம் சாலையில் வரும் வாகனங்களும் காந்தி மண்டபம் சந்திப்பில் சி.பி.டி. நோக்கித் திருப்பி விடப்படும்.
வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் படேல் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், குருநானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சாலையில் இருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள், எம்.சி. ராஜா யூ-டர்ன் பகுதியில் அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்படும். அங்கிருந்து தங்களது இலக்குகளை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்தி, அதற்கேற்ப தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

