பறவைகள், நாய்கள் தொல்லை, உடைந்த ட்ராலிகள்| சென்னை விமான நிலையத்தின் அவலத்திற்கு எப்போது விடிவுகாலம்?
சென்னை விமான நிலையத்தின் உட்புற பகுதியில் சேதமடைந்த வலைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published : August 28, 2026 at 6:35 PM IST
-BY சுபாஷ் தயாளன்
பறவைகள், நாய்கள் தொல்லை, பழுதடைந்த ட்ராலிகள், பிக்கப் பாய்ண்ட் பிரச்சனை என சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாங்கள் தொடர்ந்து சந்தித்து வரும் இன்னல்களுக்கு தீர்வு காண விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக தலைநகர் சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் திகழ்கிறது. இங்கிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, துபாய், கத்தார், சவூதி அரேபியா, ஷார்ஜா, இந்தோனேசியா, நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, அகமதாபாத், ஹைதராபாத், காஷ்மீர், அமிர்தசரஸ், போபால், கொச்சின், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கும் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2024-2025 ஆம் நிதியாண்டில் 22.41 மில்லியன் பயணிகளையும், 2025-2026 ஆம் நிதியாண்டில் 23.02 மில்லியன் பயணிகளையும் சென்னை விமான நிலையம் கையாண்டு அசத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 30 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் மூன்று முனையங்கள் மற்றும் ஒரு சரக்கு முனையத்தைக் கொண்டுள்ளது சென்னை விமான நிலையம்.
விமான நிலையத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதிகளில் பயணிகள் அமரும் இடங்கள், உணவருந்தும் இடங்களில் புறாக்கள், காகங்கள் சுற்றித் திரிவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் பயணிகள் உணவுகளை வாங்கி அருந்தும் போது காகங்கள் உணவுகளைக் கொத்திச் செல்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சர்வதேச விமானப் பயணிகள் வந்துச் செல்வதற்கு நுழைவுவாயிலாக உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இதுப்போன்ற நிகழ்வுகள், வெளிநாட்டு பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்
சென்னை விமான நிலைய பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயணிகளை தெரு நாய்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் சம்பவங்களும் தொடர் கதையாகியுள்ளது. விமான நிலைய வளாகத்துக்குள் தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லக்கேஜுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், தங்களது லக்கேஜ்களைப் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லக்கேஜ்களை சம்மந்தப்பட்டப் பயணிகளுக்கு கிடைக்கும் வகையில் விமான நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உடைந்த ட்ராலிகளை மாற்ற கோரிக்கை
விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையத்திற்குள் வரும் பயணிகள் கன்வேயரில் வரும் லக்கேஜ்களை ட்ராலிகளில் வைத்து வெளியே கொண்டு செல்வது வழக்கம். தற்போது, விமான நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள ட்ராலிகளில் பெரும்பாலானவை மிகவும் சேதமடைந்துள்ளது. ட்ராலிகளில் உள்ள சக்கரங்கள் பெரும்பாலும் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் குடும்பத்துடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் லக்கேஜ்களை வெளியே எடுத்துச் செல்வதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களில் புகார் அளிக்கும் பயணிகள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகளை சர்வதேச விமான பயணிகள் மற்றும் உள்நாட்டு விமான பயணிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு புகைப்படங்கள், வீடியோக்களுடன் புகார்களைப் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்
சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, "சென்னை விமான நிலையத்தின் உட்புற பகுதியில் பறவைகள் நுழையாத வகையில் பாதுகாப்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் அந்த வலைகள் சேதமடைந்து அல்லது தளர்ந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதன் வழியாக பறவைகள் உள்ளே வந்திருக்கலாம். சேதமடைந்த வலைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழுதடைந்த ட்ராலிகளால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். விமான நிலையத்தில் பழுதடைந்த ட்ராலிகளை தங்களது குழுவினர், அவ்வப்போது கண்டறிந்து தனிமைப்படுத்தி, அதனை சீரமைத்து வருகின்றனர். இனி பழுதடைந்த ட்ராலிகளை விரைவாகக் கண்டறிந்து அகற்றி சீரமைக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்" என்றனர்.
வாகன பிக்கப் பாயிண்ட் பிரச்சனை
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நீண்டக் காலமாக எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான வாகன பிக்கப் பாயிண்ட் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ப்ளாசா அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.23.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "டாக்ஸி பிக்கப் பிளாசா திறக்கப்படாததற்கு சில நிர்வாக பிரச்சனைகள் மற்றும் ஒப்பந்தம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது. இதனால் பிளாசா திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பின்னர் பிளாசா பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் பிளாசா பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத்திற்கு ஆர்டிஐ ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் பேட்டி
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு ஆர்டிஐ ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் அளித்த பேட்டியில், "சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஏரோபிரிட்ஜ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. இதனால் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை ஒரே நேரத்தில் கையாளுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.
சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது ஓடுதளத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது பராமரிப்பு பணிகளின்போது மட்டுமே அது மாற்று ஓடுதளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு ஓடு தளங்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் விமான இயக்கங்களின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்க முடியும்.
டாக்ஸிவே உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் விமான இயக்கத்தை மேலும் அதிகரிக்க முடியும். சென்னை விமான நிலையத்தில் தற்போது ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகள் கையாளப்பட்டு வரும் நிலையில் தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தினால் எதிர்காலத்தில் 5.5 கோடி பயணிகளை கையாளும் திறனை உருவாக்க முடியும்.
புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு இன்னும் காலதாமதம் தேவைப்படும் நிலையில் அதுவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். எனவே இரண்டாவது ஓடுதளம் டாக்ஸிவே ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் புதிய முனையம் உள்ளிட்டவற்றை விரைந்து மேம்படுத்த வேண்டும். பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையிலும், அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்" என்றார்.
ஐந்தாவது முனையத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்று இடம் தேர்வுச் செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அத்துடன், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்தாவது முனையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது முனையம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விமான பயணிகள், அன்றாடம் எதிர்க்கொள்ளும் சவால்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து அதனை களையச் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

