காளி சிலையால் கிராமத்தில் துர்சம்பவங்கள் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்
கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதிகள் நேற்று மாலைக்குள் காளி சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Published : December 15, 2025 at 8:54 PM IST
சென்னை: சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் ஒரு வீட்டில் காளி சிலை வைத்து வழிபட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, எண்ணூர் நெட்டுக்குப்பம் 3 ஆவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது வீட்டில் காளி சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். மேலும் மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கிராமத்தில் பல துர்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய கிராம மக்கள் காளி சிலையை உடனே அகற்ற வேண்டும் என, கடந்த மார்ச் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து திருவொற்றியூர் வட்டாட்சியர் சகாயராணி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காளி சிலையை அகற்றி கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து கார்த்திக் நீதிமன்றத்திற்கு சென்று சிலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை காளி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்காக முற்பட்ட நிலையில் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் நெட்டுக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் துறையினர் காளி சிலையை தர மாறுத்துவிட்டதாக தெரிகிறது.
எனவே கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதிகள் நேற்று மாலைக்குள் காளி சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் திலீப் குமார் சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் கார்த்திக் சிலையை எடுத்து கொண்டு நெட்டுக்குப்பம் நோக்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார்.
இதை கேள்விப்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவார குப்பம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஆண்களும், பெண்களும் என திரண்டு, ''காளி சிலையை ஊருக்குள் கொண்டு வர விடமாட்டோம்'' என்று கூறி நெட்டுக்குப்பம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான போலீசார் கார்த்திக்கை அழைத்து வந்து கிராம மக்களிடம் பேசுமாறு கூறினார்.
| இதையும் படிங்க: வாகனங்களில் இருந்து ''பிரஸ், போலீஸ், வழக்கறிஞர்'' ஸ்டிக்கர்கள் அகற்றம்; பள்ளிக்கரணை உதவி ஆணையர் அதிரடி |
அதன்படியே கார்த்திக் பேசிய போதும் பொதுமக்கள் ஊருக்குள் சிலையை கொண்டு வர விட மாட்டோம் என, கோஷமிட்டனர். இதையடுத்து கார்த்திக் காளி சிலையை வேறு ஊரில் வைப்பதாக கூறி வாகனத்தில் எடுத்துச் சென்றார். இதன் பிறகே மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

