பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மாம்பழம் சின்னத்தையும், பாமக பெயர் மற்றும் கொடியையும் பயன்படுத்த அன்புமணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Published : February 25, 2026 at 5:06 PM IST
சென்னை: பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அன்புமணி தரப்புக்கு சென்னை உரிமையியல் உத்தரவிட்டுள்ளது.
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பாமக இரண்டு அணியாக தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு மாழ்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான கடிதத்தை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பாமக தலைவர் என குறிப்பிட்டு தி.நகர் அலுவலகத்துக்கு அனுப்பியது. இதை எதிர்த்து நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இரு தரப்புக்கும் உத்தரவிட்டது.
இதனிடையே பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று (பிப்ரவரி 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிறுவனர் ராமதாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின்படி, பாமக கட்சி தலைவராக ராமதாஸ் தான் உள்ளார். அதனால், அன்புமணி ராமதாஸ் தலைவர் என்று கூற தடை விதிக்க வேண்டும். மேலும், மாம்பழம் சின்னத்தையும், பாமக கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் பயன்படுத்த அன்புமணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
| இதையும் படிங்க: முழு அரசு மரியாதையுடன் தோழர் நல்லகண்ணுவை வழியனுப்பி வைப்போம் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம் |
இதையடுத்து, இந்த வழக்கில் அன்புமணி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்டதால், அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

