ETV Bharat / state

முடிக்காத பணிகளை முடித்ததாக கூறி கல்வெட்டு போட்டவர்கள்; திமுகவை சாடிய அமைச்சர் செங்கோட்டையன்

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளுநரைச் சந்திப்பது வழக்கமான ஒன்று என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 10:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: முடிக்காத பணிகளை முடித்ததாகக் கூறி கல்வெட்டு போட்டவர்கள், இந்த கருத்தை கூறுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகர் 6- வது நிழற்சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கீழ் உள்ள போகன்வில்லா பூங்கா ரூபாய் 2.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து பூங்காவை ஆய்வுச் செய்தார். ஆய்வின் போது, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "சென்னையில் உள்ள மக்கள் இயற்கையோடு வாழ வேண்டும். பெரியவர்கள், குழந்தைகள் ஓய்வு எடுக்க வசதியாக சென்னை அண்ணா நகரில் உள்ள இந்த போகன்வில்லா பூங்காவில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள இந்த போகன்வில்லா பூங்கா ரூபாய் 2.95 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். அதேபோல தவெக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல சிறப்பு மிக்க நகரமாகவும், பொலிவான நகரமாகவும் சென்னையை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய கனவு" எனத் தெரிவித்துள்ளார்.

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பெயரின் கல்வெட்டை மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் நடந்தப்படும் என முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துக்கள் இருக்கும். ஒரு அரசு வரும்போது அந்த அரசு செய்கின்ற திட்டங்களை நிறைவேற்றி இறுதியில் அந்த பணிகளை முடிக்கிறார்களோ, அந்த பணிகள் முடிக்கும்போது அதற்கு பொறுப்பேற்று அதனை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் பெயர் தான் கல்வெட்டில் இடம் பெறும்.

இதுவரை இருக்கின்ற நிலைப்பாடுகளை மாற்றி உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவது கிடையாது; இதுவரை நாங்கள் 95% பணிகளை முடித்த நிலையில், 5% முடித்துவிட்டு கல்வெட்டு போட்டவர்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த கருத்துக்களை சொல்வது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கிறது" என்றார்.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குதிரை பேரம் நடத்துவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "இந்த ஆட்சிக்கு நல்ல கருத்துக்களை சொல்ல நாட்டு மக்கள் அவர்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்தனர். ஆனால் அவர்கள் இந்த பணிகளை செய்து இருப்பது, வெட்கக் கேடான விஷயம். இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறை மூலமாக கிடைக்கும்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக தரையிறங்கிய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர்; வண்டலூர் அருகே பரபரப்பு

வேண்டுமென்றே குற்றச்சாட்டை சொல்கிறார்கள். குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பொறுத்த வரை ஜெயலலிதா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர் என எங்களோடு இருந்துவிட்டு, அனுபவித்துவிட்டு திமுகவிடம் சென்றார். இப்போது திமுகவில் சேர்ந்த பிறகு தனக்கு விளம்பரம் வேண்டும் என்று இதுபோன்ற கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அது தவிர எங்களுக்கு அந்த தேவையே இல்லை என்பது முக்கியமான ஒன்று. எங்களுக்கு தேவையான வலிமையான ஆட்சி நடத்துவதற்கு சரியான முறையில் கூட்டணி ஆதரவு தந்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்டின் போன்றவர்களை நாங்கள் அழைக்கக் கூடிய தேவை இல்லை.

எப்போதும் எதிர்க்கட்சியில் அமர்ந்துக் கொண்டிருப்பவர்கள், ஆளுநரைச் சந்திப்பது வழக்கம். எங்களைப் பொறுத்தவரை தூய்மையாகவும், நேர்மையாகவும், கன்னியத்தோடும், நாட்டைக் காப்பதற்காக நாள்தோறும் திட்டங்களை முதலமைச்சர் உருவாக்கி வருகிறார். மக்கள் அவர் பின்னால் பெரும் திரளாக நிற்கின்றனர்" என்றார்.