தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாய்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
பெண் வீட்டிற்குள் சென்ற நேரத்தில், வாசலில் நின்றுக் கொண்டிருந்த டெலிவரி பாய்யும் சத்தமே இல்லாமல் பெண்ணின் பின்னாலேயே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.

Published : June 3, 2026 at 6:10 PM IST
சென்னை: வந்த இடத்தில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் டெலிவரி பாய் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் 31 வயது பெண் ஒருவர், கணவர் மற்றும் தனது குழந்தை உடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஆன்லைன் ஷாப்பிங் வாயிலாக வீட்டு உபயோக பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த பொருளை டெலிவரி செய்ய டெலிவரி பாய் ஒருவர் கடந்த மே 31 அன்று மதியம் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பார்சலையும் அவர் அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்த நேரத்தில் அவர் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதைத் தெரிந்து கொண்ட டெலிவரி பாய், பார்சலை கொடுத்த பின்னரும் அங்கிருந்து நகராமல், பெண்ணின் வீட்டின் முன்னாலேயே நின்றுள்ளார். இதனை கவனித்த அப்பெண், அவரிடம் என்ன வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், 'குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து, தண்ணீர் எடுத்து வர அந்த பெண் வீட்டிற்குள் சென்ற நேரத்தில், வாசலில் நின்றுக் கொண்டிருந்த டெலிவரி பாய்யும் சத்தமே இல்லால் பெண்ணின் பின்னாலேயே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன அந்த பெண், எதற்காக வீட்டிற்குள் வந்தாய் என கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
ஆனால், அவரின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் திடீரென அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. உடனே அப்பெண் மேலும் கத்தி கூச்சலிடவே, உடனடியாக அந்த டெலிவரி பாய் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதையடுத்து, பெண் அளித்த புகாரின் பேரில், அமைந்தகரை காவல் நிலைய போலீஸார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாயை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதல்கட்டமாக டெலிவரி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த நபர், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 22) என்பது தெரிய வந்தது. மேலும், அவரின் செல்ஃபோன் எண்ணைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.
| இதையும் படிங்க: கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் - அமைச்சர் ராஜ்மோகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை |
இதையடுத்து, அவர் அயனாவரம் பகுதியிலேயே சுதந்திரமாக சுற்றித்திரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கேயே வைத்து அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். லோகேஷ் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

