ETV Bharat / state

குடியுரிமையை மறைத்து 10 வருடங்கள் தமிழகத்தில் வசித்த இலங்கைப் பெண் கைது

இலங்கையை சேர்ந்த பெண் தனது குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை பெற்று, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்)
சென்னை விமான நிலையம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 1:26 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று கொண்டு இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்ணை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த பேபி லோனா என்பவர், தனது இலங்கை குடியுரிமையை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக, சென்னையில் உள்ள வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலக அலுவலர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பேபி லோனாவின் பெற்றோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியாவை சேர்ந்த முஸ்டாக் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அவர் வந்ததும் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். அப்போது, ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட இந்திய அடையாள ஆவணங்களை பெற்றதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய பாஸ்போர்ட்டையும் பேபி லேனா பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண் (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், நேற்று இலங்கைக்கு செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:

1. திடீரென மூடப்பட்ட வான்வழி - மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

2. இரட்டை கொலைக்கு காரணமான போஸ்டர் பிரச்சினை? நாங்குநேரி சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி பின்னணி

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஜென்டுகள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற முயற்சிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து மட்டுமே பாஸ்போர்ட் பெற வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் துணைத் தூதரகங்களை அணுகி மட்டுமே விசா பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடியுரிமை கொண்ட பெண், போலி ஆவணங்கள் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதோடு மட்டுமல்லாமல், பின்னர் வெளிநாடு செல்ல முயன்ற இந்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.