ETV Bharat / state

பரந்தூர் விமான நிலையம் ரத்து எதிரொலி; மீனம்பாக்கத்தில் வேகமெடுக்கும் 5-வது டெர்மினல் பணிகள்

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள், பயணிகள் கையாளும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 10:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

- By எஸ். உசேன்

சென்னை: பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டுள்ள நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தொழில்துறை சார்பில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரத்து செய்யப்பட்ட திட்டம்

அதாவது, கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வந்தனர். இதுபோன்ற சூழலில், பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, அத்திட்டத்தை புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு ரத்து செய்தது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்த இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விவசாயிகளும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இதை வரவேற்றாலும், திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழ்நாட்டிற்கு பொருளாதார இழப்பு ஏற்படும், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமென பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டம்

இதுபோன்ற சூழலில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 5-வது டெர்மினல் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், 5-வது டெர்மினலுக்கான வடிவமைப்பு, வெள்ளப்பாதிப்பு தொடர்பான ஆய்வு மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னை விமான நிலையத்தை மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலையுடன் இணைக்கும் வகையில், புதிய அணுகுச்சாலை அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூற்றை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீனம்பாக்கத்தில் வேகமெடுக்கும் 5-வது டெர்மினல் பணிகள்
மீனம்பாக்கத்தில் வேகமெடுக்கும் 5-வது டெர்மினல் பணிகள் (ETV Bharat Tamil Nadu)

விமான நிலையத்திலிருந்து அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஒன்றான தரப்பாக்கம் வரை அணுகுச்சாலை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொழிச்சலூர், தரப்பாக்கம் வழியாக இந்த அணுகுச்சாலையை அமைப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடையாறு ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், மேம்பாலப் பாதை அமைத்து விமான நிலையத்தை புறவழிச்சாலையுடன் இணைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதையும் படிங்க: பரந்தூருக்கு மாற்றாக ஓசூர்? - புதிய விமான நிலையம் அமைப்பதை கர்நாடகா எதிர்க்குமா?

விரைவில் டெண்டர்

சுமார் 4 கி.மீ தொலைவுக்கு இந்த அணுகுச்சாலையை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஆண்டு பயணிகள் கையாளும் திறனை தற்போதைய 35 மில்லியனில் இருந்து 55 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய டாக்ஸிவே அமைப்பதன் மூலம் விமான நிலைய ஓடுபாதைகளின் செயல்திறனை அதிகரித்து, ஒரு மணி நேரத்தில் கையாளக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 45 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மாற்றாக, நீண்ட கால அடிப்படையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தையே விரிவுபடுத்தி, அதன் பயணிகள் கையாளும் திறன் மற்றும் விமானப் போக்குவரத்து செயல்திறனை அதிகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.