ஹெல்மெட் அணிந்து வந்தால் 'கட்டா குஸ்தி-2' டிக்கெட்; வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி
ஹெல்மெட் அணிந்து வந்த சுமார் 50 நபர்களுக்கு கட்டா குஸ்தி 2 படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

Published : July 5, 2026 at 3:10 PM IST
தஞ்சாவூர்: ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, தொண்டு நிறுவனம் ஒன்று 'கட்டா குஸ்தி - 2' திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சாலை விபத்துகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் போக்குவரத்து காவல்துறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தஞ்சையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
அதாவது, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும், 'கட்டா குஸ்தி-2' திரைப்படத்தை குடும்பத்தில் உள்ள 4 பேர் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர். அதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
இதுகுறித்து தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. எனவே, தஞ்சாவூரில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, பொதுமக்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
அதேபோன்று, 'தலைக்கவசம் உயிர்க்கவசம்' என்பார்கள், எனவே ஹெல்மெட் அணிந்தால் பாதுகாப்பு அதிகம். கலகலப்பாய் குடும்பத்துடன் பாருங்க கட்டா குஸ்தி, என்று ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்க்க இலவசமாக டிக்கெட் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினோம். சுமார் 50 நபர்களுக்கு இந்த டிக்கெட் வழங்கப்பட்டது” என்று கூறினர்.
| இதையும் படிங்க: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 41 மின்சார ரயில்கள் ரத்து |
அதேபோல, தஞ்சாவூரில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ஐஸ்கிரீம், தக்காளி, வெங்காயம், மாம்பழம், சினிமா டிக்கெட், பட்டுப் புடவை, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று, கடந்த வாரம் காரில் 'சீட் பெல்ட்' அணிந்து வந்தவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் ஐஸ்கிரீம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

