ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒலிக்கும் கூட்டணி ஆட்சிக்கான 'குரல்கள்' - அழுத்தத்திற்கு பணியுமா திமுக, அதிமுக தலைமை?

இந்த முறை கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு, தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி குறித்த அழுத்தம் வலிமையாகும் என்று கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 10:08 PM IST

4 Min Read
Choose ETV Bharat

BY சி. உசேன்

சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகளிடையே பரவலாக விவாதிக்கப்படும் 'கூட்டணி ஆட்சி'க்கான சூழல் உள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தயாராகி வரும் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் களம் இப்போதே அனல் பறக்க துவங்கிவிட்டது. மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 'ஆட்சி அதிகாரம்' என்ற வார்த்தை நாளுக்குநாள் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு இப்போது காரணமாகி இருப்பது தவெக தலைவர் விஜய்யின் பேச்சுதான். சில கட்சிகள் இதுகுறித்து முன்பு பேசி இருந்தாலும், கூட்டணி சமயத்தில் அவர்கள் டிமாண்ட் வைத்ததில்லை. மேலும் தேர்தல் நெருக்கத்தில் இந்த அளவுக்கு பேசுபொருளாகவும் மாறியதில்லை. தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று விஜய் பிரகடனம் செய்ததில் இருந்து பல கட்சிகளில் முக்கிய விவாத பொருளாகவே இது மாறியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பாஜகவும், ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று கேட்ட அன்புமணியும் தற்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளனர். ஆனால், அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''எங்கள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்'' என்றார். இந்நிலையில், கூட்டணியில் இணைந்த அன்புமணி ஆட்சி அதிகார முழக்கத்தை நிறுத்திக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸில் 'ஆட்சியில் பங்கு' என்ற குரல் வெகுவாக எழுந்து வருகிறது. இந்நிலையில், கூட்டணி ஆட்சிக்கான சூழல் தமிழ்நாட்டில் உள்ளதா? என்பது குறித்து பத்திரிகையாளர் மற்றும் கட்சி தலைவர்கள் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

இன்னும் வலிமையாக பேசப்படும்...

மூத்த பத்திரிகையாளர் ஷபீர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கட்சிகளை சார்ந்து இயங்கக் கூடிய ஒரு நிலை தான் அனைத்து சிறிய கட்சிகளுக்கும் இருந்து வந்தது. மறைந்த காங்கிரஸ் நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் 2006-11 வரை கூட்டணி ஆட்சி குறித்து பேசி இருந்தார். ஆட்சியில் பங்கு என்பதை கூட்டணி வைக்கும் எல்லா கட்சிகளுமே விரும்பும். ஆனால் திமுகவும், அதிமுகவும் அதை ஊக்கப்படுத்தியது இல்லை.

எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக அறிவித்த பின்னர் தற்போது எல்லா கட்சியும் அதுகுறித்து பேச துவங்கிவிட்டனர். 'கூட்டணியாக தேர்தலில் போட்டியிடும் போது ஏன் ஒரு கட்சி மட்டும் ஆட்சி அமைக்க வேண்டும்? உள்ளாட்சி தேர்தலில் அதிகாரத்தில் பங்கு தரும் போதும், மத்தியில் நாங்கள் (தேசிய கட்சிகள்) தரும் போதும், மாநிலத்தில் ஏன் தவிர்க்கப்படுகிறது?' என ஆட்சி அதிகாரம் கேட்பவர்களின் வாதமாக உள்ளது.

தவெக வருகையின் காரணமாக, கூட்டணி ஆட்சி அதிகாரம் கேட்பதற்கான வலிமை அதிகரிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தால், ஆட்சி அதிகாரம் குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அது இல்லையென்றால் கூட்டணி ஆட்சி குறித்து இன்னும் வலிமையாக பேசப்படும்.

காங்கிரசை பொறுத்தவரை, 2006 ஆம் ஆண்டே கூட்டணி ஆட்சியை நழுவ விட்டுவிட்டோம், ஆனால் இந்த முறை விடக்கூடாது என நினைக்கிறது. எது எப்படி இருந்தாலும், இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக தவெக இருக்க போகிறது. ஆனால், அவர்கள் யாருடைய வாக்குகளை பிரிக்க போகிறார்கள் என தெரியவில்லை. களம் மாறி இருக்கிறது என்பதால் கூட்டணி ஆட்சி பற்றி இப்போதே பேச துவங்கியுள்ளனர். தேர்தலுக்கு பிறகு தான் கூட்டணி ஆட்சி ஏற்படுமா? இல்லையா? என்பது தெரிய வரும்'' என்றார்.

தொண்டர்கள் திருப்திக்கு...

டிகேஎஸ் இளங்கோவன் (கோப்புப்படம்)
டிகேஎஸ் இளங்கோவன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், ''கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் கட்சியை வலிமைப்படுத்தவும், கட்சிக்காரர்களை திருப்திபடுத்தவும் பேசுவார்கள். காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழு எங்களுடன் பேசிய பிறகு தான் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

தலைமைதான் முடிவு செய்யும்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன், ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதா, இல்லையா? என்பது குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து கூட்டணி குறித்தும், ஆட்சி அதிகார பங்கு குறித்தும் இந்த குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்'' என்றார்.

ஆனால், கிரிஷ் சோடங்கரும் ஆட்சி அதிகார பங்கு குறித்து பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, ''எந்த அரசியல் கட்சியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என சொல்லுமா? என்று தான் அவர் கூறினார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்போதும் இருந்தது இல்லை. தேர்தல் முடிந்த பிறகு திமுகவுக்கு தனி பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என பார்க்க வேண்டும். ஒருவேளை கூட்டணி ஆதரவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வந்தாலும், அதிகாரத்தில் பங்கு பெற வேண்டுமா? என்பதை ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் தான் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி; யாரும் அவர்களுடைய கருத்தை பேசலாம். திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு தான் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பேச முடியும்'' என்றார்.

அப்புறம் பாத்துக்கலாம்...

எடப்பாடி பழனிசாமி - அன்புமணி ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி - அன்புமணி ராமதாஸ் (ETV Bharat Tamil Nadu)

பாமக வழக்கறிஞர் பாலு, ''அதிமுகவுடன் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. மற்ற அனைத்து விஷயங்களையும் பிறகு பேசிக்கொள்ளலாம்.' என்றார்.

இனி தமிழ்நாட்டில் எடுபடாது...

முன்னதாக கூட்டணி ஆட்சி குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ''தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை.

கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வசப்படுத்தியே அதிகார பாதையில் அவர்கள் (அதிமுக,திமுக) இதுவரை பயணித்துள்ளனர். இப்படி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக கபளீகரம் செய்யும் தந்திர அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுபடாது. இனி இங்கே அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது.

காரணம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறி இருக்கிறது. அந்தக் குரலை பிரதிபலிக்கிற சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள். 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்கிற சுயமரியாதை முழக்கமே 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாய் இருக்கும்'' என குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே...

அந்த வரிசையில், கூட்டணி ஆட்சி குறித்து கோவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, ''தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் நினைக்கின்றனர். இந்த கோரிக்கைகள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வைக்கப்படுகிறது'' என்றார்.