திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்- மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
"திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது மட்டுமே. அது நடக்காது" அமித் ஷா தெரிவித்தார்.

Published : January 5, 2026 at 8:10 AM IST
புதுக்கோட்டை: தற்போது நடக்கும் திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, இந்த புது வருடத்தில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சாரத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் விழாவில் பேசிய அமித்ஷா, ”மாபெரும் மகத்தான, தொன்மையான தமிழ் மொழியில் என்னால் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். தமிழ்நாட்டின் புனிதமான மண்ணிற்கு என்னுடைய வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
2026, ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அணிவகுப்போம். பாரதத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். பாஜகவும், அதிமுகவும் பிற கூட்டணி கட்சியினரும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம். எப்பாடுபட்டாவது திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம்.
ஸ்டாலின் கனவு நிறைவேறாது
ஒட்டு மொத்த பாரதத்திலும் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால் அது திமுக தான். தேர்தல் அறிக்கையில் மிகக் குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள ஆட்சி என்றால் அதுவும் திமுக ஆட்சி தான். தமிழ்நாட்டில் தாய்மார்கள், சகோதரர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. திமுகவின் ஒரே நோக்கம், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது மட்டுமே. இங்கு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.
2024 தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக தேர்தலை சந்தித்தாலும், இரண்டு கட்சிகளும் வாங்கிய வாக்குகளை சேர்த்து பார்த்தால் 26 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருப்போம். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தமிழுக்கு எதிரானது என்று மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழை அறிமுகம் செய்ததே தே.ஜ. கூட்டணி அரசு தான். ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்வதையும் மோடி ஆட்சி தான் கொண்டு வந்தது.
வாரணாசியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரால் இருக்கை அமைத்துள்ளார் மோடி. மகத்தான வேதமான திருக்குறளை, பாரத நாட்டின் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பிஜி தீவுகளில் தமிழை கற்பதற்கு வசதிகள் ஏற்படுத்தியுள்ளது. மாபெரும் செங்கோலினை காங்கிரஸ் மற்றும் திமுக அருங்காட்சியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். பிரதமர் மோடி அதனை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கிறார்.
முதன்முறையாக ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. 2025-ல் ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்டியை பிடித்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பீகார் மாநிலத்தில் தே.ஜ. கூட்டணியை எதிர்த்து தேர்தலை சந்தித்த இந்தியா கூட்டணி மண்ணை கவ்வியது. அதே போல, 2026-ல் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி" என அமித் ஷா பேசினார்.

