ETV Bharat / state

பொங்கலுக்கு 'ஜனநாயகன்' ரிலீஸ் இல்லை - ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 3:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா இன்று தீர்ப்பளித்தார். அதில், "திரைப்படத்துக்கு U/A சான்று வழங்க முடிவு செய்த பின் படத்தை ஆய்வு செய்த குழுவில் உள்ள உறுப்பினர் புகார் அளித்ததை ஏற்க முடியாது. இது போன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் அது அபாயகரமானதாகி விடும்.

ஏற்கனவே படத்தை பார்த்து தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் இல்லை. அதனால், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், பிற்பகல் விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து தணிக்கை குழு சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பிற்பகல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. படத்தில் மத கலவரம் மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மறு ஆய்வு குழு படத்தை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது. இதை நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதில், "ஒரு முறை படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரலாம் என முடிவெடுத்து விட்டு பிறகு எப்படி அனுமதி மறுக்க முடியும்? குழுவில் உள்ள உறுப்பினரே எப்படி புகார் அளிக்க முடியும் என தெரியவில்லை" என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் அளிக்காமல் தீர்ப்பு வழங்கியது அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஆகாதா? ஏன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பொறுமையாக காத்திருக்காமல் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பொறுமையாக காத்திருக்காமல், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மணிக்கு மணி ஏன் நீதிமன்றத்தின் மீது அதீத அழுத்தம் கொடுக்கிறீர்கள்? சென்சார் சான்றிதழ் வாங்காமலேயே படம் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் எப்படி நிர்ணயிக்க முடியும்?

ஜனவரி 6 ஆம் தேதி பதிவு செய்த வழக்கில் தீர்ப்பு பெற ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்? குறைந்தது 48 மணி நேரமாவது தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் உடனே வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்த மேல் முறையீடு வழக்கின் உத்தரவை, நீதிமன்ற இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கே.வி.என். படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் செல்ல முயல்வதை அறிந்த தலைமை நீதிபதி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட தீர்ப்பை விரைந்து பதிவேற்றம் செய்ய ஒப்புக்கொண்டார்.

அடுத்த ஒரு சில மணி நேரங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.