உலகிலேயே மிகவும் வெளிப்படையான தேர்தல் நடைமுறை நம்முடையது - தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்
இந்திய தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையை மாணவர்கள் உணர வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

Published : August 27, 2026 at 9:26 PM IST
|Updated : August 27, 2026 at 10:54 PM IST
சென்னை: உலகிலேயே மிகவும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக இந்தியாவின் தேர்தல் செயல்முறை திகழ்கிறது என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம் தெரிவித்தார்.
மாணவர்களுடனான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை, பரவலான செயல்பாடு மற்றும் வலிமை குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்ததாக ஞானேஷ் குமார் கூறினார்.
தேர்தல் நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தற்போது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தேர்தல் கல்வி மன்றங்கள் (Electoral Literacy Clubs) அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்த அவர், எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகும் மாணவர்கள் தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதும், அதன் வெளிப்படைத்தன்மையை உணர்ந்து நம்புவதும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
| இதையும் படிங்க: ஜனநாயகத்தை மேம்படுத்த நடவடிக்கை - பி.எல்.ஓ.க்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உறுதி |
இந்தியாவில் தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதுடன், உலகிலேயே மிகவும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக இந்தியாவின் தேர்தல் செயல்முறை திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
"Students of Today Are the Torchbearers of Democracy Tomorrow": CEC Gyanesh Kumar
— Election Commission of India (@ECISVEEP) August 27, 2026
Read more: https://t.co/CJWh9JjwPG pic.twitter.com/I55pZIQ91M
தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்கள் பங்கு மிகவும் முக்கியம் என குறிப்பிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தமிழ்நாடு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான (பி.எல்.ஓ.க்கள்) ஆலோசனை கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

