ETV Bharat / state

110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் - சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்

110 விதியின் கீழ் கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் (SS Tamil Nadu Assembly YT)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:24 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 110 விதியின் கீழ், வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து சட்டமன்றத்தில் தான் பேசியதை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திரும்பப் பெற்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 2) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக கடந்த தி.மு.க. ஆட்சியில் 2021- 26-ஆம் ஆண்டில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பிற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 110 விதியின் கீழ் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை மட்டுமே வெளியிடலாம். இதைத் தவிர வழக்குகளை ரத்து செய்வது குறித்து அறிவிக்க கூடாது. கடந்த காலத்தில் அப்படி அறிவிக்கப்பட்டதில்லை என வாதிட்டனர்.

அப்போது பேசிய தி.மு.க. கொறடா எ.வ. வேலு, “முதலமைச்சரின் 110 விதியின் கீழ் அரசு சார்பில் மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டுமே அறிவிப்பது வழக்கம். ஆனால் வழக்குகளை ரத்து செய்வது குறித்து அறிவிப்பது இதுவரை வழக்கத்தில் இல்லை. முந்தைய அரசு போராட்டங்களின்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறும்போது, தற்போது பிரச்சனை எழுகிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “முதலமைச்சரின் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. 2021-26 காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதில் உண்மைக்கு மாறான தகவல் எதுவும் இல்லை. போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார். மேலும், முதலமைச்சர் விரும்பும் எந்த அறிவிப்பையும் 110 விதியின் கீழ் வெளியிடலாம் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்க்கு நன்றி - சமூக ஆர்வலர் மேதா பட்கர்

இந்நிலையில், சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். தி.மு.க. ஆட்சியில் 110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என்று நான் தெரிவித்தேன். அதற்கு உரிய ஆதாரங்களை சபாநாயகர் கொடுத்தார். தி.மு.க.ஆட்சியில் 110 விதியின் கீழ் தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். நான் பேசியதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இதனை ஏற்று கொண்ட உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்” என்று கூறினார்.