அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எதிர்காலத்தில் இதுபோல் உண்மைக்கு புறம்பாக தகவல்களை பரப்ப மாட்டேன் எனவும், தற்போதைய வலைதள பதிவிற்கு மன்னிப்பு கோரியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Published : September 1, 2026 at 11:16 AM IST
சென்னை: பழனி கோயில் நிலம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் குறித்து, அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா குமார் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ரமேஷ் தனது உறவினருக்கு சட்டவிரோதமாக பதிவு செய்து கொடுத்தாக வினோத் சூர்யா குமார் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு தொடர்பாக அவர் மீது பொது அமைதியை குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தனது மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, வினோத் சூர்யா குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கிரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏ. சரவணன் மற்றும் சி.அருண்குமார் ஆகியோர், மனுதாரரின் சமூக வலைதள பதிவு, தற்போதைய அரசின் நிர்வாக குறைபாடுகளை எடுத்துக்கூறும் அரசியல் பதிவே எனவும், இந்த கருத்து இந்து சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு சார்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர், மனுதாரரின் பதிவு முற்றிலும் உண்மைக்கு மாறானது. அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து பதிவிட்டதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தவறான தகவலால் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார்.
| இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவர் குறித்த பேச்சு.. அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு |
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையை ஆராயாமல் அமைச்சருக்கு எதிராக பதிவிட்டதாக மனுதாரரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அவரது பதிவால், சமூக ஒழுங்கிற்கு எந்தவித பாதிப்பும், சமூக பதற்றமும் ஏற்படவில்லை என்பதால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. எனினும், அமைச்சருக்கு எதிராக உண்மையை ஆராயாமல் பதிவிட்டதால், அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதால், அதுகுறித்து அமைச்சரே முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோல் உண்மைக்கு புறம்பாக தகவல்களை பரப்ப மாட்டேன் எனவும், தற்போதைய வலைதள பதிவிற்கு மன்னிப்பு கோரியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

