வருமான கணக்கில் முரண்பாடு - நவாஸ்கனி எம்பிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
விதி 26-ன்படி தேர்தலில் போட்டியிடும் போது அப்போது உள்ள சொத்து விவரங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். மற்ற விவரங்களை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Published : March 3, 2026 at 4:53 PM IST
சென்னை: வருமான கணக்கு மற்றும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குகளில் முரண்பாடுகள் இருந்தாலும் அதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாததால் எம்.பி நவாஸ்கனிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி நவாஸ்கனி கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்துக்களை மறைத்தாகக் கூறி வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், "கடந்த 2019-24 காலகட்டத்தில் சுமார் 23 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததை கணக்கில் காட்டாமல் எம்.பி நவாஸ்கனி மறைத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சிபிஐ-க்கு 2025 செப்டம்பர் 24 ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், புகார் மீது எந்த விசாரணையும் சிபிஐ நடத்தவில்லை.
2019-2024 காலத்தில் 8 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் நவாஸ்கனி குறிப்பிட்டுள்ளார். ஆனால், வருமான வரித்துறை கணக்கீட்டின் படி அவரது சொத்து மதிப்பு தற்போது 39 கோடி ரூபாயாக உள்ளது. இது வருமானத்தில் இருந்து 288 சதவிகிதம் அதிகமாகும். வருமான கணக்கை லட்சத்திலும், தேர்தல் பத்திரத்தில் கோடியிலும் குறிப்பிட்டுள்ளார். நிலம் விற்றதால் மட்டுமே பணம் வந்தது என்பதை நம்பும்படியாக இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ்கனி எம்பி தரப்பில், "பல்வேறு முதலீடுகள், வியாராரம் மற்றும் தொழில் மூலமாக வருமானம் கிடைத்தது. தேர்தல் நேரத்தில் என்னிடம் இருந்த சொத்து விவரங்களை மட்டுமே பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
விதி 26-ன்படி தேர்தலில் போட்டியிடும் போது அப்போது உள்ள சொத்து விவரங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். மற்ற விவரங்களை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எனது சொத்து விவரங்கள் அனைத்தும் பொது தளத்தில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில், "வெங்கடாசலபதி அளித்த புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில், 2019-2024 ஆம் ஆண்டு குறிப்பட்ட காலத்தில் விவசாயத்தின் மூலம் வருமானம் கிடைத்தது. நிலங்களை விற்பனை செய்ததில் இருந்தும் வருமானம் கிடைத்தது. அதனால், எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது" என கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு, "குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? எப்படி நவாஸ்கனியின் வருமானத்தில் இந்த மாறுதல் ஏற்பட்டது? 2019-2024ல் 39.24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக எந்த அடிப்படையில் கணக்கு காட்டினீர்கள்? பிரமாண பத்திரத்தில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் வித்தியாசம் வருகிறது. ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் எப்படி உத்தரவிட முடியும்?" என கேள்வி எழுப்பினர்.
வருமான கணக்கு மற்றும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கணக்கில் முரண்பாடுகள் இருந்தாலும் அதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாததால் எம்.பி நவாஸ்கனிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட அளவிலேயே வருமானம் இருப்பதாக சிபிஐ விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், நவாஸ்கனியின் வருமான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

