ETV Bharat / state

'எங்க ஊரு கயிறு இல்லாம ஜல்லிக்கட்டு இல்லப்பே' - மதுரையில் களைகட்டிய மூக்கணாங்கயிறு விற்பனை!

ஜல்லிக்கட்டு சீசன் துவங்கி விட்டதால், கீழமாசி வீதியில் உள்ள கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே கிராமப்புறங்களில் கடை வைத்துள்ள சிறு, சிறு வியாபாரிகளும் இங்கு வந்து கொள்முதல் செய்கின்றனர்.

காளை மூக்கணாங்கயிறு
காளை மூக்கணாங்கயிறு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 6:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

- By இரா.சிவக்குமார்

"அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளுக்கு தேவையான கயிறுகள் விற்பனை களைகட்டியுள்ளன. காளைகளுக்கு ரூ.1500 மதிப்பிலும், அதற்கு மேலாகவும் கயிறுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சீசனில் மட்டும் சுமார் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை நடைபெறும்” என்கிறார் பாஷா.

காளைகளை கட்டி இழுத்துச் செல்லும் மூக்கணாங்கயிறு ஜல்லிக்கட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. வாடிவாசலின் பின்புறம் இருந்து உள்ளே அழைத்து வரப்படும் காளைகளும், அதன் மூக்கணாங்கயிறை அறுத்து விட்ட பிறகு தான் ராக்கெட் போன்று சீறிப்பாயும்.

காளைகளை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு

அதே போன்று புல்லட் ரயில் வேகத்தில் பாய்ந்து ஓடி வரும் காளையை 'கலெக்ஷன் பாய்ண்ட்டில்' அதன் உரிமையாளர்கள் லாவகமாக பிடித்துச் செல்ல மூக்கணாங்கயிறு மிகவும் அவசியம். ஆகையால் கயிறு இல்லையென்றால் காளையும் இல்லை, மாட்டு உரிமையாளர்களும் இல்லை என்பது தான் உண்மை. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு சென்றால் கையில் கயிரோடு மாடுபிடி உரிமையாளர்களும், அவரது உதவியாளர்களும் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

களைகட்டும் மூக்கணாங்கயிறு விற்பனை

விதவிதமாக மூக்கணாங்கயிறு வாங்க வேண்டுமானால், மதுரை கீழமாசி வீதிக்கு சென்றால் போதும். மாட்டு உரிமையாளர்கள் விரும்பும் பல வகையில் இங்கு கயிறுகள் கிடைக்கின்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகள் பாரம்பரியமாக இங்கே செயல்பட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் பரபரப்பாக இந்த கடைகள் இயங்கினாலும், தைப் பொங்கலை ஒட்டி இங்கு நிலவும் பரபரப்பு, தீபாவளிக்கு முன்னர் பட்டாசு வாங்கும் கூட்டத்திற்கு இணையானது.

காளை மூக்கணாங்கயிறு (ETV Bharat Tamil Nadu)

இந்த பகுதியில் பாஷா பாய் கடை பிரபலம். இந்த கடையின் உரிமையாளர் பாஷா, ”என்னுடைய தாத்தா காலத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக தற்போது வரை மாடுகளுக்கான கயிறு விற்பனையை செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தேவையான அனைத்து கயிறு வகைகளும் எங்களிடம் கிடைக்கும்.

வாடி வாசல், மஞ்சு விரட்டு, வட மஞ்சுவிரட்டு என மூன்று வகையான மாடுபிடி விளையாட்டுகளில் பயன்படுத்தக் கூடிய கயிறு வகைகளை நாங்களே தயார் செய்து வாடிக்கையாளரின் தேவைக்கேற்றார் போல் விற்பனை செய்து வருகிறோம். இந்தக் கயிறுகள் அனைத்தும் மதுரையில் மட்டும் தான் தனித்துவத்தோடு கிடைக்கும். சுமார் 200 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் கூட இங்கு வந்து தான் கால்நடைகளுக்கு தேவையானவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

இதற்காகவே ஜல்லிக்கட்டுக்கு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே கயிறு உற்பத்தியை தொடங்கி விடுவோம். தற்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளுக்கு தேவையான கயிறுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரை கீழமாசி வீதியில் மட்டும், சுமார் 10 கடைகள் உள்ளன. சாதாரண பசு மாடுகளுக்கு ரூ.150-க்கு கயிறுகள் விற்பனை செய்யப்பட்டாலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ரூ.1500 மதிப்பிலும், அதற்கு மேலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் சீசனில் மட்டும் இந்த கடைகளில் விற்பனை சுமார் ரூ.10 லட்சம் வரை இருக்கும்” என்றார்.

தற்போது ஜல்லிக்கட்டு சீசன் துவங்கி விட்டதால், அவரது கடையில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே கிராமப்புறங்களில் கடை வைத்துள்ள சிறு, சிறு வியாபாரிகளும் இங்கு வந்து கொள்முதல் செய்கின்றனர்.

ரூ.20 முதல் 2000 ரூபாய்க்கு கயிறு விற்பனை

மூக்கணாங்கயிறு விற்பனை குறித்து சென்ட்ரல் கயிறு மார்ட் கடையின் உரிமையாளர் வேல்முருகன் கூறுகையில், ”கயிறு மட்டுமின்றி மாடுகளுக்கு அணிவிக்கப்படும் மணிகள், செயின் ஆகியவை இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. நான்கு தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். மதுரை மட்டுமன்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கூட ஏற்றுமதி செய்கிறோம். பொதுவாக இந்த நேரத்தில் தான் மாடுகளுக்கு கட்டப்பட்டிருக்கும் பழைய கயிறுகளை மாற்றி புதிய கயிறுகளை கட்டுவார்கள்.

அவரவர் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகளை நேரடியாக பார்த்து வாங்கி செல்கிறார்கள். குறைந்தபட்சம் ரூ.20-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.2000 வரை விலையுள்ள கயிறுகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவு, வேலைப்பாட்டை பொறுத்து இன்னும் சற்று விலை கூடுதலாகவும் ஆகலாம். இதே போன்ற கயிறுகள் பிற பகுதிகளிலும் கிடைக்கும், ஆனால் இங்குள்ள தரம் இருக்காது” என கூறினார்.

மதுரை மாவட்டம் பொட்டபாளையத்தைச் சேர்ந்த மலர் என்ற வாடிக்கையாளர் கூறுகையில், ”பாரம்பரியமாகவே நாங்கள் இந்த பாய் கடையில் தான் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகளை வாங்குகிறோம். எங்களது கிராமம் மட்டுமன்றி, அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் மதுரை கீழமாசி வீதியில் தான் கயிறுகளை வாங்குகின்றனர்.

இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முக்கிய அடையாளமாகத் திகழும் முனியாண்டி கோயில் - சிறப்புப் பார்வை

இங்கு கயிறு மிகத் தரமாக இருக்கும். பயன்பாட்டைப் பொறுத்து ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை கயிறுகள் நீடித்து உழைக்கும். தற்போது பொங்கல் வருவதால் மாட்டுப் பொங்கலுக்கு புதுக் கயிறு வாங்கி மாடுகளுக்கு கட்டுகின்ற வழக்கம் உண்டு. ஆகையால் நேரடியாக வந்து கயிறுகளை வாங்கி செல்கிறோம்” என்றார்.