துணி கூடையால் சிறுத்தையுடன் மல்லுக்கட்டிய வீரத்தமிழச்சி - நெல்லை வனப்பகுதியில் நடந்தது என்ன?
வீட்டை பராமரிக்க அனுமதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும், வனத்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே சுஜிதாவின் குற்றச்சாட்டாக உள்ளது.

Published : November 14, 2025 at 8:18 PM IST
திருநெல்வேலி: நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் தனி ஆளாக மல்லுக்கட்டிய பெண், அரசு தங்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியின மக்களும், மின்வாரியத்தில் பணிபுரியும் சிலரும் குடும்பத்தினருடன் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தைகள், யானைகள் நடமாட்டம் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நள்ளிரவில் காரையாறு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.
அந்த சிறுத்தை அதே பகுதியில் வசித்துவரும் ஜோதி என்பவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அப்போது ஜோதியின் வீட்டில் அவரது மனைவி சுஜிதா(வயது 40) மற்றும் அவரது 2 மகன்கள் தூங்கி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவரது ஒரு மகன் மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்நிலையில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த சுஜிதா, சிறுத்தை புகுந்ததை கண்டு அதிர்ந்துள்ளார். அந்த சிறுத்தை அவரது மாற்றுத்திறனாளி மகனை நோக்கி செல்வதை பார்த்த சுஜிதா, வீரப் பெண்ணாக மாறி சிறுத்தையிடம் இருந்து மகனை காப்பாற்றியுள்ளார்.
சிறுத்தையுடன் போராட்டம்
இதில் காயம் அடைந்த சுஜிதா, நேற்று அம்பை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். மேலும், அவர் துணி கூடையை வைத்து சிறுத்தையை சரமாரியாக அடித்து எப்படி விரட்டினார் என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
இதுதொடர்பாக சுஜிதா உணர்ச்சி பொங்க கூறியபோது, "கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது எனது அம்மா மற்றும் மகன் இருவர் சப்தம் போட்டதை கேட்டு எழுந்து பார்த்தேன். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்திருந்தது. வீட்டை பராமரிக்க வனத்துறையிடம் அனுமதி கேட்டு, அவர்கள் அனுமதி வழங்காததால், பாதுகாப்பற்ற கதவைத் தாண்டி சிறுத்தை வந்துள்ளது.
உடனே எனது 17 வயது மகன் வீட்டிலிருந்து மற்றொரு அறையை திறந்துவிட்டு, சிறுத்தையை வெளியேற்ற முயற்சி செய்தான். அதற்குள் சிறுத்தை அருகில் வந்துவிட்டது. மற்றொரு மாற்றுதிறனாளி மகன் வீட்டில் படுத்திருந்ததால், அவனருகிலேயே நான் இருந்தேன்.
ஒரு கட்டத்தில் சிறுத்தை என் மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. என் மூத்த மகன் ஒரு கூடையை பாதுகாப்புக்காக தூக்கி வீசினான். கூடையை வைத்து சிறுத்தையுடன் மல்லுக்கட்டி உயிருக்கு போராடினேன். பின்னர் என் மகன் கதவின் ஷட்டரை திறந்துவிட்டதால், சிறுத்தை வெளியே சென்றுவிட்டது. என் மகன் துணிச்சலாக செயல்பட்டு எங்களை காப்பாற்றியுள்ளான்," என்றார் சுஜிதா பெருமிதத்துடன்.
மேலும் அவர் கூறும்போது, "வீட்டை பராமரிக்க அனுமதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும், வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை அரசு மனிதர்களாகவே பார்ப்பதில்லை. வீட்டை பராமரிக்காததால் தான், சிறுத்தை உள்ளே வருகிறது. இதற்கு முன்பு நாய்கள், கோழிகளை கடிப்பதற்காக சிறுத்தை இந்த பகுதிக்கு வந்து செல்லும்.
| இதையும் படிங்க: அலிநகர் தொகுதியில் மைதிலி தாக்கூர் வெற்றி! ஆர்ஜேடி-க்கு ‘பிகில்’ காட்டிய 25 வயது பெண் வேட்பாளர்! |
ஆனால், இதுபோன்று வீட்டுக்குள் ஒரு நாளும் வந்ததில்லை. அந்த சிறுத்தை மிகப் பெரியதாக இருந்தது. வனத்துறை எங்களை எப்படியாவது காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். உயிரே போனாலும் இந்த இடத்தை விட்டு நாங்கள் கீழே போகமாட்டோம். எங்களுக்கு இங்க தான் வாழ்வாதாரம் இருக்கிறது" என்று தெரிவித்த அவர், உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது; இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

