காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்; காட்டுப்பகுதியில் அரங்கேறிய கொடூரம்
ராஜேஷை அழைத்து சென்று, உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

Published : January 6, 2026 at 7:44 PM IST
விருதுநகர்: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் காதலியை கொலை செய்த காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். அதேப் பள்ளியில் தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகில் உள்ள கொலக்கட்டாறுகுறிச்சியை சேர்ந்த மாரிராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (25) என்பவர் படித்து வருகிறார். ஒரே பயிற்சி பள்ளியில் படித்து வந்ததால் இருவரும் நட்புடன் பழகி, பின்னர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இரண்டு பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கந்தூரி ரங்கபுரம் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் உமாவை பிடித்து கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு உமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், உடனடியாக உமாவை கொலை செய்து விட்டதாக கூறி வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் ராஜேஷ் சரண் அடைந்தார்.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற இடம் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகில் உள்ள கழுகுமலை காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் சரணடைந்த ராஜேஷை வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் கழுகுமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், பொறுப்பு இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் கொலையாளி ராஜேஷை அழைத்து சென்று, உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
| இதையும் படிங்க: 'உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க எதையும் செய்ய திமுக அரசு தயாராகிவிட்டது' - நயினார் நாகேந்திரன் |
மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்துக்கு காதல் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனே காதலியை கொலை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராம பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

