மெரினாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 16 வயது சிறுவன் கைது
கைது செய்யப்பட்ட சிறுவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Published : May 31, 2026 at 9:00 PM IST
சென்னை: மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியை சேர்ந்த ஓர் தம்பதி நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு தனது 6 வயது குழந்தையுடன் காரில் சென்றனர். மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு எதிரே காரை பார்க்கிங் செய்துவிட்டு தங்களது குழந்தையுடன் கடற்கரை மணல் பரப்பிற்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமி குதிரை சவாரி செய்ய வேண்டும் என பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். இதையடுத்து கடற்கரையில் இருந்த குதிரை ஓட்டியிடம் குழந்தையை சிறிது தூரம் சவாரி அழைத்து செல்லுமாறு அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குதிரை ஓட்டி குழந்தையை குதிரையில் அமர வைத்து மின்விளக்குகள் இல்லாத இருள் சூழ்ந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பெற்றோர் விரைவாக வரும்படி கூச்சலிட்டதால் குதிரை ஓட்டி சிறுமியை அழைத்துக்கொண்டு மீண்டும் வந்துள்ளார். குழந்தையை ஏன் இருட்டு பகுதிக்கு அழைத்து சென்றாய்? என குதிரை ஓட்டியை பெற்றோர் திட்டியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரித்தபோது, தன்னிடம் குதிரை ஓட்டி 'பேட் டச்' செய்தார் என அந்த சிறுமி தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் குதிரை ஓட்டியை பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இதைப் பார்த்த மெரினா கடற்கரையில் இருந்த நபர்கள் குதிரை ஓட்டியை துரத்தி பிடித்து தாக்கி மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குதிரையை ஓட்டி சென்ற நபர் 16 வயது சிறுவன் என்பதும், சிறுமியை குதிரை சவாரி செய்தபோது அவரை இருள் சூழ்ந்த இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மெரினா காவல் நிலைய போலீசார் சிறுவனை மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போக்சோ பிரிவின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

