சென்னை விமான நிலையத்தில் 'பாடி வார்ன் கேமரா' அறிமுகம்: பயணிகள் புகார்களுக்கு தீர்வு
சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவாகும் வகையில் 'பாடி வார்ன் கேமரா'வில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Published : January 11, 2026 at 9:34 AM IST
சென்னை: பயணிகளை சோதனையிடும் சுங்க அதிகாரிகள் சோதனையின் போது பாடி வார்ன் கேமரா (Body Worn Camera) அணிய வேண்டும் என்ற புதிய நடைமுறை சென்னை விமான நிலையத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது சுங்கத் துறையின் முக்கியப் பணியாகும். இந்தச் சோதனைகள் மரியாதையான முறையில் நடைபெற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் சில விமான நிலையங்களில், சுங்க அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் ஆடியோ மற்றும் வீடியோவாக முழுவதும் பதிவாகும் வகையில், உடலில் அணியும் கேமரா 'பாடி வார்ன் கேமரா' (Body Worn Camera) பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த கேமரா, அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கிடையிலான உரையாடல், சோதனை முறைகள் அனைத்தையும் பதிவு செய்யும். அனைத்து பதிவுகளும் தேதி, நேரத்துடன் கேமராவில் சேமிக்கப்படும். தென்னிந்தியாவில் முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் முதல் கட்டமாக 8 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 24 கேமராக்கள் வழங்கப்பட உள்ளதாக சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து அனுப்புவதற்கு கிரீன் சேனல், ரெட் சேனல் என்ற இரண்டு வழிகள் உள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள் இந்த கேமராவை அணிந்து செயல்படுவார்கள்.

இதன் மூலம் அதிகாரிகள் விசாரணை நடத்துவது, உடைமைகளை சோதனை செய்வது, பயணிகள் பேசுவது, சுங்கத் துறை அதிகாரிகள் பேசுவது என அனைத்தும் இந்த 'பாடி வார்ன்' கேமராவில் பதிவாகும். இதனால் சுங்கச் சோதனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய 'பாடி வார்ன்' கேமரா திட்டத்தின் மூலம் பயணிகள் மீது தவறு இருந்தாலோ, சுங்கத்துறை அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தினாலோ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் தவறு செய்தாலோ நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

