ஊட்டியில் நடைபெற்ற படகு போட்டி; முதல் பரிசை வென்ற கிருஷ்ணகிரி தம்பதி
பத்திரிகையாளர்களுக்கான படகு போட்டியில் நீலகிரி மாவட்ட ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் நடேஷ் குமார், நியூஸ் தமிழ் நீலகிரி மாவட்ட செய்தியாளர் அனீஸ் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.

Published : May 29, 2026 at 10:40 AM IST
நீலகிரி: உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற படகு போட்டியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதி முதல் பரிசை வென்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று (மே 29), தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், உதகை படகு இல்ல ஏரியில் படகுப் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் கவரும் வகையில் நடைபெற்ற இந்த படகு போட்டியில், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு, படகு போட்டிகளைக் கண்டு ரசித்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கென நடைபெற்ற படகு போட்டிகளிலும் சிலர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுச் சென்றனர்.
இந்த படகு போட்டி, சுற்றுலாப் பயணிகள் ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு, நீலகிரி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கான படகு போட்டி மற்றும் உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான படகு போட்டி என பல்வேறு பிரிவுகளின் நடைபெற்றன. மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், சுற்றுலா பயணிகளுக்கான போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி தம்பதியினர் முதல் இடத்தை பிடித்தனர். இதேபோல், நீலகிரி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கான படகு போட்டியில் நீலகிரி மாவட்ட ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் நடேஷ் குமார், நியூஸ் தமிழ் நீலகிரி மாவட்ட செய்தியாளர் அனீஸ் ஆகியோர் முதலிடத்தை பிடித்து கோப்பையை தட்டிச் சென்றனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பரிசுகளை வழங்கினார்.
| இதையும் படிங்க: தவெக நிர்வாகிகள் தாக்கியதில் காவலரின் கை உடைந்த சம்பவம் - கும்பகோணத்தில் இருவர் கைது |
"குளு குளு" சூழல் மற்றும் ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த படகுப் போட்டி, ஒரு மறக்க முடியாத மற்றும் மாறுபட்ட கோடைக்கால அனுபவமாக இருந்ததாக சுற்றுலா வந்த பயணிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊட்டி கோடை விழா
நடப்பாண்டிற்கான கோடை விழா மே 4 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, நறுமணப் பொருட்கள் கண்காட்சி, மலைப்பயிர்கள் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து, நேற்று படகு போட்டியும் நடைபெற்றுள்ளது.

