ETV Bharat / state

'இந்து மக்களை ஏமாற்றவே சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்' - முதல்வரிடம் கேள்வி எழுப்பும் வானதி சீனிவாசன்

’நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் பாஜக செயல் தலைவர் நிதின் நபின் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார்.

தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு பொங்கல் கொண்டாடிய பாஜக செயல் தலைவர் நிதின் நபின்
தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு பொங்கல் கொண்டாடிய பாஜக செயல் தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட பாஜகவினர் (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 2:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: இந்து மக்களை ஏமாற்றுவதற்காக இல்லாத சமத்துவ பொங்கல் விழாவை மு.க.ஸ்டாலின் கொண்டாடுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்ட பாஜக சார்பில் வடவள்ளி பகுதியில் ’நம்ம ஊரு மோடி பொங்கல்’ என்ற பெயரில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், பாஜக மகளிர் அணி சார்பில் 120 பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், வள்ளிக்கும்மி, சிலம்பம், பரதம், ஜமாப் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மகிழ்ந்தார்.

தொடர்ந்து தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “பொங்கல் பண்டிகையை போலவே பீகாரிலும் சேட் திருவிழா பாரம்பரிய கலாச்சாரத்துடன் கொண்டாடப்படும். இதுதான் தமிழுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு. தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தலைவர் மோடி” என்று பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை. பொங்கல் பண்டிகையின்போது மட்டும் ‘சமத்துவ பொங்கல்’ என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சுகளை வைத்து, சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

’நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழா
’நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழா (ETV Bharat Tamil Nadu)

சிறுபான்மையின மக்கள் எங்காவது பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது, கலாச்சாரத்தோடு இறைவனை வணங்கும் நிகழ்வோடு, சூரியனை வழிபடுவதை பார்த்திருக்கிறார்களா? சிறுபான்மையின மக்கள் அவர்களது பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாத சமுதாயத்தினருடன் சேர்ந்து, இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்” என விமர்சித்தார்.

’நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
’நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (ETV Bharat Tamil Nadu)

மேலும் பேசிய அவர், “கோவையில் மையக்குழு கூட்டத்தில் விவாதித்த விஷயங்களை வெளியில் பேசக்கூடாது. தகுந்த நேரத்தில் யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ, அவர்களுக்கு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். விருப்பமனு கேட்பது குறித்து தற்போது வரை கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேபோல, சிபிஐ விசாரணைக்காக டெல்லி வரும் தவெக தலைவர் விஜய் பாதுகாப்பு கேட்பது வழக்கமே. ஆனால், நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும்” என்றார்.

வானதி சீனிவாசன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: 'திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மக்களின் கனவு' - தமிழிசை

முன்னதாக மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “வட இந்திய தலைவர்களும் நாம் பொங்கல் கொண்டாடுவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, பாஜக சார்பில் இந்த பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம். கொங்கு மண்டலம் என்பது நம் ஆதரவான மண்டலம். ஆனால், தற்பொழுது இந்த ஆட்சியில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றத்திலும் நாம் இதுபோன்ற விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ இந்த தை பிறக்கும் பொழுது இந்த ஆட்சி மாறி ஆன்மீக ஆட்சி வரவேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “நீங்கள் எல்லாம் இங்கு வந்ததும், சூரியன் காணாமல் போய்விட்டது. நிச்சயமாக மழை வரும், மழை வந்தால் குளங்கள் நிரம்பும், குளங்கள் நிரம்பினால் தாமரை மலர்ந்தே தீரும்” என தெரிவித்தார்.