குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது; காங்கிரஸின் வீழ்ச்சியே அதற்கு உதாரணம் - வானதி பாய்ச்சல்
பீகாரின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

Published : November 14, 2025 at 7:56 PM IST
சென்னை: காங்கிரஸ் கட்சி மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகவும், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், 190க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி. பீகார் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வழிகாட்டுதலுடன் இரட்டை எஞ்சின் அரசு தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பெண்கள் அதிகளவில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி அரசு பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.
எஸ்.ஐ.ஆர் ஏன் அவசியம்
இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நெருங்கி வருகிறது. எனவே, இந்த ஐந்து மாநில தேர்தலுக்கும், பீகாரின் வெற்றி அடிப்படையாக இருக்கும். மேலும், தமிழ்நாட்டிலும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வரும். தேசிய ஜனநாயகக் கூட்டணி இங்கு சிறப்பான வெற்றியைப் பெறும். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
உங்களது தோல்விக்கான காரணம் நீங்கள் தானே தவிர, எஸ்.ஐ.ஆர் (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) கிடையாது. எஸ்.ஐ.ஆர் வந்த பிறகு எங்களது வாக்குகள் திருடப்பட்டுள்ளது என யாரும் கூறவில்லை. உண்மையான வாக்களர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல், அவர்களது ஜனநாயக கடமையை காப்பாற்றுவதற்காக இந்த எஸ்.ஐ.ஆர் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பதாக தி.மு.க-வினர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், ஏதாவது செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். என்னதான் எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக பல குற்றச்சாட்டை முன் வைத்தாலும் கூட பீகாரில் தங்களுக்கு எது வேண்டும் என்று மக்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளார்கள்.
குடும்ப அரசியல்
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். பீகார் மக்களும் குடும்ப அரசியலை நிராகரித்துள்ளனர்.
அதனால் தான் காங்கிரஸ் தொடர் தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. அவர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
| இதையும் படிங்க: பீகார் தோல்விக்கு என்ன காரணம்? காங். தலைவர்கள் விளக்கம்! |
முன்னதாக தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் பீகார் தேர்தல் வெற்றியைக் கொண்டாடினர்.

