கோயிலில் தகாத வார்த்தை பேசுவதா? சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்குங்க - தமிழசை செளந்தரராஜன்
இந்துக்களை பார்த்தாலே அமைச்சர் சேகர்பாபு டென்ஷன் ஆகிறார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Published : January 3, 2026 at 9:58 AM IST
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுசீந்திரம் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு கூறிய வார்த்தைகளை அவர் திரும்ப பெற வேண்டும்; கோயிலில் தகாத வார்த்தை பேசிய அவரை, அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “சுசீந்திரம் தாணுமாலயணன் சுவாமி கோயில் மும்மூர்திகளும் இருக்கும் கோயில். மேலும் இது பிரம்ம தேவனே சாப விமோசனம் பெற்ற கோயில். ஆனால், இன்று சில பேருக்கு சாபம் ஏற்று கொள்ளும் கோயிலாக மாறியுள்ளது. இறைவனை பிரார்த்திக்க வருகின்ற நேரத்தில், அவர்களை பார்த்து நீ சோறு சாப்பிடுறியா? மலம் சாப்பிடுறியா? என்று கேட்ட அமைச்சர் சேகர்பாபுவை யாரும் மன்னிக்க மாட்டார்கள். தேவாலயம் மற்றும் மசூதி வாசலில் நின்று இப்படி உங்களால் பேச முடியுமா?
நீங்கள் ஊழல் செய்வதாலும், சரியான நிர்வாக திறமை இல்லாததாலும் மக்கள் உங்களை பார்த்து உணர்ச்சி பூர்வமாக சத்தமிட்டார்கள். அதற்கு ஏன் டென்ஷன் ஆகுறீங்க? சேகர்பாபுவுக்கு இந்துக்களை பார்த்தாலே டென்ஷன் தான். இந்த கோயிலில் நடந்த விஷயம், அனைத்து இந்துக்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்து, அவரை அறநிலையத்துறையில் இருந்து நீக்க வேண்டும்.
| இதையும் படிங்க: கோயில்களில் மதவெறியை வளர்க்காதீர்கள் - அமைச்சர் சேகர்பாபு ஆவேசம் |
மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை உதாசீனம் படுத்தும் சேகர்பாபுவை யாராலும் பொறுத்து கொள்ள முடியாது. அவர் இனி எந்த கூட்டத்திற்கும் வரக்கூடாது. வந்தால் வாயை மூடிக்கொண்டு போக வேண்டும். தமிழக அரசு சார்பில் 3000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஒரு கோயிலுக்காவது முதலமைச்சரை அழைத்து வந்தீர்களா? முதலமைசருக்கு திருப்பரங்குன்றமும் வேண்டாம், கோயிலும் வேண்டாம். ஆனால், உண்டியல் மட்டும் வேண்டும். இந்துக்களை புண்படுத்தினால் வருகிற தேர்தலில் கடுமையான தண்டனையை சந்திக்க நேரிடும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தாயே என்று கும்பிட வரும் கோயிலில் நாயே என்று பக்தர்களை கூற உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? மலம் சாப்பிடுகிறாயா என கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ‘பாரத் மாதா கி ஜெய் என்பது’ கெட்ட வார்த்தையா? பக்தர்கள் கூடும்போது பல கோஷங்களை எழுப்புவார்கள். இதை அமைதியாக கேட்டுவிட்டு, அமைச்சர் என்ற முறையில் சென்றிருக்க வேண்டும். கோயிலில் கோஷம் போட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

