'திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மக்களின் கனவு' - தமிழிசை
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published : January 11, 2026 at 10:52 AM IST
சென்னை: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பாஜக தலைவராக அடுத்த மாதம் தேர்வு செய்யப்படவுள்ள நிதின் நபின் கோயம்புத்தூர் வந்துள்ளார். அவரை சந்திப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளேன். பிரதமர் தமிழகம் வருகை குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு வர வாய்ப்புள்ளது.
மக்களை பார்த்து உங்களது கனவைக் கூறுங்கள் என தமிழக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் ஒவ்வொருவரின் கனவு என்னவாக இருக்கும் என்றால், திமுக ஆட்சி முடிய வேண்டும் என்பதுதான். இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. திமுக அரசின் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விவாத மேடையில் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மட்டுமல்லாமல், பாஜகவிற்கு பாடம் புகட்டுவேன் என்று கூறுகிறார். ஒருவிஷயத்தை பத்திரிகையாளர்களுக்கு இன்று தெரியப்படுத்த விரும்புகிறேன். பத்திரிக்கையாளர்கள், நடுநிலைவாதிகள் எனக் கூறிக்கொண்டு, திமுகவை சேர்ந்த நபர்கள் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள். அவர்களால் ஒருவிமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.
யூடியூபர்களின் வீட்டுக்கதவை உடைத்து நடு இரவில் கைது செய்யும் இவர்கள், சென்சார் போர்டில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்கிறார்கள். சென்சார் போர்டின் சட்டவிதிகளை எப்படி மத்திய அரசுடன் ஒப்பிட முடியும்? முதலமைச்சரின் குடும்பமே சினிமா தொழிலில் இருக்கிறார்கள். சென்சார் போர்டில் சட்ட நடவடிக்கைகள், விதிமுறைகள் என்னவென்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் முதலமைச்சர் சட்டவிதிகளை மீறி செயல்படுகிறார். மத்திய அரசிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என சென்சார் போர்டு தெளிவாகக் கூறிவிட்டது. அப்படி இருக்கும் பொழுது மீண்டும் மீண்டும் இவர்கள் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பதற்கு திமுகதான் காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்துக்கு பதிலளித்த அவர், “முதலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்படுகிறதா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் கூட்டணியில் மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்களா? எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர முக்கிய காரணம் பிரதமர் மோடி.
எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் நடப்பதற்கும் முக்கிய காரணமும் மோடி தான். ஆனால், ராமநாதபுரத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களை கிண்டலும், கேலியும் செய்தவர்கள் தான் திமுகவினர். செங்கல்லைத் தூக்கிக் கொண்டு கிண்டலும், கேலியும் செய்தவர்களுக்கு மத்தியில் நாங்கள் செங்கோலை நிறுவினோம். எனவே எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வந்ததற்கும் திமுகவினருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

