ஓய்வூதிய திட்டம்; மக்களும், அரசு அதிகாரிகளும் ஏமாளிகளா? - நயினார் நாகேந்திரன்
பொங்கல் பண்டிகைக்கு பிறகுதான் எந்தெந்த கட்சிகள் எங்கே இருக்கிறது என்பது தெரியும் என திண்டிவனத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார்.

Published : January 4, 2026 at 11:37 AM IST
விழுப்புரம்: "ஆட்சி முடியும் தருவாயில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார்கள் என்றால், மக்களும், அரசு அதிகாரிகளும் என்ன ஏமாளிகளா?" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.3) அறிவித்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பை திண்டிவனத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “ஆட்சி வருவதற்கு முன்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறினீர்கள். ஆனால், 5 ஆண்டுகள் முடியப்போகும் தருவாயில் புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளீர்கள். அப்படியென்றால், இதனை பார்க்கின்ற மக்களும், அரசு அதிகாரிகளும் என்ன ஏமாளிகளா? புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எப்போது அரசாணையை பிறப்பிக்கப் போகிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக பேசிய அவர், “பாஜக எழுச்சி பயணம் 53வது நாளில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இன்றைய (ஜன.4) தினம் புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். மேலும், பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எத்தனையோ கூட்டணிகள் வந்து சேரும். மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சி அமைப்பார்.
சோழர் காலத்தில் “சிங்கபுரி” எனவும், மாமன்னன் சத்ரபதி சிவாஜியால் சிறந்த பாதுகாப்புக் கோட்டை எனவும், ஆங்கிலேயர்களால் “கிழக்கின் ட்ராய்” எனவும் பெருமையுடன் அழைக்கப்பட்ட செஞ்சிக் கோட்டையைத் தன்னுள் அடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில் நமது இன்றைய பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது… pic.twitter.com/9NNR5OJEAC
— Nainar Nagenthran (@NainarBJP) January 3, 2026
திமுக ஆட்சிக்கு வரும்போது மின் கட்டணம், வரியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால், மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. பள்ளி, கல்லூரி வாசலிலே கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 52 சதவீதமும்; குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 15 சதவீதமும் அதிகரித்துள்ளது. போதை பழக்கத்தால்தான் வட மாநில இளைஞர்களை இங்குள்ள சிறார்கள் தாக்குகிறார்கள்” என்றார்.
| இதையும் படிங்க: வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட வேண்டும் என திமுக திட்டமிடுகிறதா? எச்.ராஜா கேள்வி |
மேலும் பேசிய அவர், “தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் கேட்கிறது. விசிக வேண்டா வெறுப்பாக கூட்டணியில் இருக்கிறது. ஆகமொத்தம், திமுக கூட்டணி கலகலத்து போயுள்ளது. பொங்கல் முடிந்தால்தான் யார் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். திமுக ஆட்சி மாற வேண்டும். இபிஎஸ் ஆட்சிக்கு வர வேண்டும்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற தாரக மந்திரத்தை சொல்பவர் மோடி. அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி, ரஷ்ய அதிபராக இருந்தாலும் சரி, அனைவரும் மோடியிடம் கேட்டு பேசுகின்ற காலம் உருவாகியுள்ளது. இந்தியா வல்லரசு நாடாக மாறி வருகிறது. ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுப்பதற்காக பணத்தை திமுகவினர் பதுக்கி வைத்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, செந்தில் பாலாஜி தனது தொகுதியில் ஒரு கிராம் தங்கமே கொடுக்கப்போவதாக பேசப்படுகிறது. ஆனால், மக்களின் ஓட்டு அவர்களுக்கு வேட்டாக மாற வேண்டும்” என நயினார் நாகேந்திரன் பேசினார்.

