அண்ணாவை பார்த்து பயமா? நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்ஷன்!
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Published : January 10, 2026 at 3:31 PM IST
கோயம்புத்தூர்: அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட பாஜகவினர் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “ஜனநாயகன் படம் வெளியீட்டுக்கும், பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. IT, ED வரிசையில் சென்சார் போர்டையும் தமிழ்நாடு முதலமைச்சசர் குறிப்பிட்டுள்ளார். ஏன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பராசக்தி படம் ரிலீஸ் ஆனது தெரியாதா? இந்த படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது? பராசக்தி யாருடைய படம்? சென்சார் போர்டு அவர்களுடைய விதிப்படி செயல்படுகின்றனர்” என்றார்.
ஆனால், அண்ணாவின் வசனங்கள் பராசக்தி படத்தில் கட் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாவைப் பார்த்து பயமா? என்ற கேள்விக்கு, “சென்சார் போர்டுகளின் விதிப்படி வசனங்கள் கட் செய்யப்பட்டிருக்கலாம். அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை. நாங்களும் அண்ணாவைப் போற்றி புகழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அப்போது பல்வேறு கொடுமைகள், மத மாற்றங்கள் நடைபெற்றன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. ஏன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரை படையெடுப்பு நடந்தது. சோமநாதபுரம் ஆலயம் மீது கஜினி முகமது 17 முறை படையெடுத்தார். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோயில் புனரமைக்கப்பட்டது.
இதன் 75-வது ஆண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் 150 சிவாலயங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களிலும் சாந்தி பூஜை நடைபெறவுள்ளது. இதை பிரதமர் மோடி தலைமையில் திருவிழாவாகக் கொண்டாடவுள்ளோம். அடிப்படையில் இன்று நாங்கள் சிவாலயத்தில் வழிபாடு செய்திருக்கிறோம். இந்த வழிபாட்டின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என வழிபாடு செய்திருக்கிறோம்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் முடிந்த பிறகு, யாரெல்லாம் வெற்றி பெற்றார்கள் என்பதை வைத்தே, அமைச்சர்கள் யார்? என்பதை முடிவு செய்வோம். அமைச்சரவையில் பங்கு வேண்டுமென நாங்கள் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்தவுடன் சொல்கின்றோம். ஆனால், இரட்டை எண்ணிக்கையில் தான் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.
மேலும், தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. இப்போது தான் ஒவ்வொருவராக கூட்டணிக்கு வர ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். ஆகையால், பொங்கல் முடியட்டும், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனத் தெரிவித்தார்.

