தவெக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜகவும் திமுகவும் வேலை செய்கிறது - ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு
காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல் 40 இடங்களிலும் வெற்றி பெறப்போவது உறுதி என ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Published : September 3, 2026 at 2:29 PM IST
சென்னை: தவெக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜகவும், திமுகவும் வேலை செய்கிறது என்று காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவின் மாநில தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பேசும்போது, இந்தியா 7.8 சதவீதம் வளர்ந்திருக்கிறது. பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு செல்லாதீர்கள். தங்கம் வாங்காதீர்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் வாங்குங்கள் என்று கூறுகிறார்.
பொருளாதாரத்தில் ஜி.டி.பி என்றால், ஒரு வருடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்பதை பார்ப்பதாகும். கடந்த வருடம் இதே நேரத்தில் 80 லட்சம் கோடி வருமானம் வந்திருக்கிறது. இந்த வருடம் 88 லட்சம் கோடி வருமானம் வந்திருக்கிறது. இதற்கு வித்தியாசம் 8 லட்சம் கோடி என்று சொல்கிறார்.
இந்தியாவில் 10.3 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. விலைவாசி 2.50 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது என்று சொல்கின்றனர். ஆனால், ஒரு ஆண்டில் வெங்காயம் விலை 63.10 சதவீத அளவும், சர்க்கரை விலை 41 சதவீத அளவும், சூரிய காந்தி எண்ணெய் விலை 18.50 சதவீதமும் உயர்ந்துள்ளது. வணிக கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது 4 சதவீதம் தான் இருக்கும். இது வளர்ச்சியே இல்லை என்ற நிலை தான். இப்படி எல்லா பொருளும் விலை உயர்ந்துள்ள நிலையில், 2.8 சதவீதம் தான் விலைவாசி உயர்வு என்று பிரதமர் மோடி குறிப்பிடுகிறார்.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் தானே இருக்கிறது. பிறகு ஏன் வெளிநாடு செல்லவேண்டாம், தங்கம் வாங்க வேண்டாம் என சொல்ல வேண்டும்? என்னை பொறுத்தவரையில் தங்கம் வாங்குவது நல்லது.
| இதையும் படிங்க: இனிமேல் துணை தாசில்தார்களுக்கும் வருவாய் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் - தமிழக அரசு புதிய நடவடிக்கை |
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்தால், பங்கு சந்தையில் சரிவு உள்ளது. வங்கி காப்பீடு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை இழப்பு தான் உள்ளது. இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுகளில் முதலீடு செய்கிறார்கள். தங்கம் தான் லாபம் தரும் முதலீடாக உள்ளது. ஆனால் அந்த தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி சொல்கிறார்.
வெளிநாட்டில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் பெற்றுள்ளது இந்தியா. ஜீ நிறுவனத்துக்கு ரூ. 22,500 கோடி கடன் உள்ளது. ஆனால், ரூ.6.5 கோடி கொடுத்தால் போதும் என்று அந்த கடனை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் சாதாரண மக்கள் வங்கி கடன் வாங்கினால் ஒரு தவணை கட்டவில்லை என்றால் எவ்வளவு தொந்தரவு செய்வார்கள் என்பது தெரியும். பெரிய நிறுவனங்களுக்கு மோடி தள்ளுபடி அளிக்கிறார்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை தடுக்கவும், காங்கிரஸ் - தவெக கூட்டணியை உடைக்கவும் திமுகவும், பாஜகவும் வேலை செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

